×

பழவேற்காட்டில் தூண்டில் வளைவு திட்டத்தில் முகத்துவாரம் அமைக்க கோரிக்கை

பொன்னேரி, டிச. 9:  பழவேற்காட்டில் ஏரியும் கடலும் இணையும் முகத்துவாரத்தில் தூர் வாரி மீனவர்கள் பயன்பாட்டுக்கு தற்காலிகமாக திறக்கப்பட்டது. இதற்கு நிரந்தர தீர்வுகாண தூண்டில் வளைவு திட்டத்தில் முகத்துவாரம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியானது மீன்பிடி பகுதியாகும். இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் படகுகள் மூலம் முகத்துவாரத்திலும், முகத்துவாரத்தின் வழியாக கடலுக்குள் சென்று மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பயன்படுத்துவது பழவேற்காடு கடலும் ஏரியும் இணையும் முகத்துவாரத்தை மட்டுமே. இந்த முகத்துவாரம் பகுதி பருவமழை தவறும் காலங்களில் கடல் மண் அடைப்பு ஏற்படும். அப்போது மீனவர்களால் அந்த மண் அள்ளப்படுவது வழக்கம். அதன் பின்பு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்வார்கள்.  

இதற்கு நிரந்தர தீர்வுகாண வேண்டி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து தற்காலிகமாக ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில்  50 அடி அகலம், 10 அடி ஆழத்தில் இயந்திரம் மூலம் முகத்துவாரம் தூர்வாரும் பணி கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி தொடங்கியது.  கடந்த 3 மாத காலமாக தொடர்ந்து நடைபெற்று வந்த மணல் அள்ளும் பணி நேற்று நிறைவடைந்தது. இதையடுத்து    மீனவ கிராம மக்களின் முன்னிலையில் மீன்பிடித் துறைமுக அதிகாரிகள் தலைமையில்  அந்த இடத்தை பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பருவநிலை மாறுபடும்போது பழவேற்காடு முகத்துவார பகுதி மணல் குவியலால் அடைபடுகிறது. இதனால் எங்களது மீன்பிடி தொழில் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வுகாண  தூண்டில் வளைவு திட்டத்தின் மூலம் முகத்துவாரம் அமைக்க வேண்டும் என்றனர்.

Tags : Establishment of Pavement ,
× RELATED புகையில்லாத போகி கொண்டாட ஆணையாளர் வேண்டுகோள்