பாலபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா

உத்திரமேரூர், டிச. 9: உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தில் அகத்தியப்பா நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபெருந்தவநாயகி உடனுறை பாலபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சீரமைப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது.  இந்த பணியானது அண்மையில் முடிவடைந்ததையடுத்து நேற்று கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 2 நாட்களும் புண்யாவாசனம், வாஸ்துஹோமம், சாந்தி ஹோமம், உள்ளிட்ட பல்வேறு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதனை தொடர்ந்து நேற்று காலை மூன்றாம்கால யாக வேள்வி பூஜை முடிந்தபின் மேளதாளங்கள் முழங்க வானவேடிக்கைகளுடன் புனித நீர் கொண்டு வரப்பட்டது. பின்னர், கோபுர கலசங்களின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.  இதையடுத்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

 விழாவில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், காஞ்சி கூட்டுறவு சங்கத் தலைவர் வாலாஜாபாத் கணேசன், எம்எல்ஏ தூசி மோகன், முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.  விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர். இரவு கோயில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஸ்ரீபெருந்தவநாயகி சமேதராக பாலபுரீஸ்வரர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags : Kumbabhisheka Festival ,Balapureeswarar Temple ,
× RELATED உமரிக்காடு முத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்