மேலக்கோட்டையூரில் அடிப்படை வசதிகள் இல்லாத விளையாட்டு பல்கலைக்கழகம்

திருப்போரூர், டிச. 9: மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு  உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் கடந்த 12 ஆண்டுகளாக  செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்திற்கென சுமார் 100 ஏக்கர் நிலம்  ஒதுக்கப்பட்டு இந்த வளாகத்தில் பல்கலைக்கழக நிர்வாக கட்டிடம், வகுப்பறைகள்,  மாணவ, மாணவியர் தங்கும் விடுதி, உணவகம், உள் விளையாட்டு அரங்கம்  உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது.     மேலும் கட்டிடங்களை ஒட்டி மாணவ,  மாணவிகள் பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சி பெறும் வகையில் கால்பந்து  மைதானம், ஓட்டப் பந்தய மைதானம், வட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு வகையான  பயிற்சி மைதானங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் போதிய பணியாளர்கள்  இல்லாத காரணத்தால் இந்த விளையாட்டு மைதானங்கள் முறையாக  பராமரிக்கப்படுவதில்லை என்று மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பாக வாலிபால் மைதானம் முழுவதும் புல், பூண்டுகள் முளைத்துள்ளன.  அதேபோன்று ஓட்டப்பந்தய மைதானம், கால்பந்து மைதானங்களிலும் ஏராளமான  புதர்ச்செடிகள் முளைத்துள்ளன. இரவு நேரங்களில் பாதுகாப்புடன் இருக்கும்  வகையில் மூன்று இடங்களில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.  ஓரிரண்டு ஆண்டுகள் மட்டுமே செயல்பட்ட நிலையில் இவை பழுதடைந்ததால் இந்த மின்  கம்பங்கள் சாய்த்து வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக போதிய விளையாட்டு  மைதானங்கள் இருந்தும் மாணவ, மாணவிகள் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை  உள்ளது. ஆகவே, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக  நிர்வாகம் இந்த வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானங்களை சீரமைத்து  எப்போதும் பயன்படுத்தும் வகையில் மாற்றித் தர வேண்டும் என்றும், இரவு நேர  உயர் கோபுர மின் விளக்குகளை அமைக்க வேண்டும் என்றும் அதில் பயிலும் மாணவ,  மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sports University ,
× RELATED அடிப்படை வசதிகள் இன்றி வசித்து வரும் கூர்கா சமுதாயத்தினர்