×

சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத பள்ளங்களால் அடிக்கடி விபத்து : வாகன ஓட்டிகள் அவதி

புழல்: சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. இச்சாலையில், மாதவரம் மேம்பாலத்தில் இருந்து இரட்டை ஏரி, புழல், சைக்கிள் ஷாப், மத்திய சிறைச்சாலை, காவாங்கரை, தண்டல் கழனி,  சாமியார் மடம், செங்குன்றம் பைபாஸ் சாலை, எம்.ஏ.நகர், பாடியநல்லூர், நல்லூர் சுங்கச்சாவடி, விஜயநல்லூர், சோழவரம் பைபாஸ் சாலை, ஆத்தூர், காரனோடை, ஜனப்பதசத்திரம் கூட்டு சாலை வரை சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் இரண்டு  பக்கங்களிலும், ஆங்காங்கே  குண்டு குழியுமாக மாறியுள்ளது. இந்த சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலைகளும் படுமோசமாக உள்ளது. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்லும் நிலை உள்ளது. சாலை பள்ளங்களில் பலர் தடுமாறி கீழே விழுந்து விபத்தில்  சிக்குகின்றனர்.

மேலும், சாலையின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் 90 சதவீதம் பழுதடைந்துள்ளதால், இரவில் இருள் சூழ்ந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து, இந்த சாலை பராமரிப்பு பணியில்  ஈடுபட்டுள்ள நல்லூர் சுங்கச்சாவடி அலுவலகத்தில் வாகன ஓட்டிகள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், “சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சமீபத்தில் பெய்த லேசான மழைக்கு சாலையின் இரண்டு பக்கங்களிலும் குண்டும் குழியுமாக மாறி உள்ளதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி  விபத்துக்களில் சிக்குகின்றனர். குறிப்பாக புழல் மருத்துவமனை அருகில், கதிர்வேடு சந்திப்பு, ஜி.என்.டி சாலை சிக்னல் மையப்பகுதி, காவாங்கரை, பாடியநல்லூர் ஆகிய பகுதி சாலைமிகவும் மோசமான நிலையில் உள்ளது.

மேலும், ஆத்தூர் பைபாஸ் சாலை அருகில் புதிதாக மேம்பாலம் கட்டும் பணி மந்தகதியில் நடைபெறுகிறது. இந்த பணியால் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறோம்.  சென்னை - கொல்கத்தா சாலை பராமரிப்பு பணியில் ஈடுபடுவதாக நல்லூர் சுங்கச்சாவடியில் பல லட்சம் ரூபாயை தினசரி வசூல் செய்யும் தனியார் நிறுவனம், சாலையை பராமரிக்காமல் அலட்சியம் செய்து வருகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்கவும், மின் விளக்குகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக இதே நிலை நீடித்தால் அனைத்து தரப்பு  மக்கள் மற்றும் லாரி, கார், கனரக மற்றும் இருசக்கர வாகன  ஓட்டிகள்  அனைவரையும் திரட்டி போராட்டம் நடத்துவேம்,’’ என்றனர்.

Tags : Crash ,Chennai ,Motorists ,Kolkata National Highway ,
× RELATED ராஜஸ்தானில் விமானப்படை விமானம் விபத்து..!!