×

விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையத்தில்1.26 கோடி தங்கம் பறிமுதல்: இலங்கை பயணிகள் உட்பட 5 பேர் கைது

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனையில் 1.26 கோடி மதிப்புடைய 3.2 கிலோ தங்கக்கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, இலங்கை  பயணிகள் உட்பட 5 பேரை கைது செய்தனர். இலங்கையை சேர்ந்த முகமது ரிச்சர்ட் (39) மற்றும் முகமது ஜாபர் (32) ஆகியோர், நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு, சென்னை திரிசூலம் மெட்ரோ ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து பாரிமுனை செல்வதற்கு டிக்கெட் வாங்கினர். பின்னர்,  ரயில் நிலைய உள் பகுதிக்குள் சென்றபோது, மெட்ரொ ரயில் நிலைய ஊழியர்கள், அவர்களது கைப்பையை ஸ்கேன் செய்தனர். அப்போது, அதில் தங்கக்கட்டிகள் இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது. உடனே, அவர்கள் இருவரையும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்காமல், சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அதன்படி விரைந்து வந்த போலீசார், அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், நேற்று முன்தினம் மாலை 6.20 மணிக்கு இவர்கள் இருவரும் இலங்கையில் இருந்து ஏர் இண்டியா விமானத்தில் தங்க கட்டிகளை சென்னைக்கு  கடத்தி வந்ததும், விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் சோதனையில் சிக்காமல் தங்கக் கட்டிகளுடன் வெளியில் வந்ததும் தெரியவந்தது.

பின்னர், இவர்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய முயன்றபோது, அங்கு சிக்கியது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ₹35 லட்சம் மதிப்புடைய 902 கிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது அவர்கள், சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலை சேர்ந்த இருவர் நள்ளிரவில் இலங்கையில் இருந்து சென்னை வரும் தனியார் பயணிகள் விமானத்தில் பெருமளவு தங்கக் கட்டிகளை கடத்தி வருவதாக, தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மேற்கண்ட விமானத்தில் வந்த இலங்கையை சேர்ந்த அப்துல் அஜீஸ் (75), முகமது முஸ்தாக் (25) ஆகியோரை பிடித்து, அவர்களது சூட்கேசை சோதனை செய்தபோது, ரகசிய அறையில் 18 தங்க கட்டிகளை மறைத்து கடத்திவந்தது  தெரியவந்தது. அதன் மொத்த எடை 2 கிலோ 80 கிராம். அதன் மதிப்பு மதிப்பு ₹81 லட்சம்.இந்நிலையில், நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியன் விமானம் சென்னை வந்தது. இதில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது, தஞ்சையை சேர்ந்த அர்ஷத் அகமது (26) என்பவர் தனது  உள்ளாடையில் 344 கிராம் தங்கக் கட்டியை மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது. அவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ₹11.56 லட்சம். திரிசூலம் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனையில் ₹1.26 கோடி மதிப்புடைய 3.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 5 பேரை  பிடித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சுங்க அதிகாரிகள் உடந்தை?
சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிர சோதனை நடத்தி கடத்தல் தங்கம், வெளிநாட்டு கரன்சி, கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். ஆனால், சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து  கடத்தி வரப்படும் தங்கம் உள்ளிட்ட பொருட்களை சுங்க அதிகாரிகள் தவற விடுவது வாடிக்கையாக உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன், விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் தவற விட்ட பல லட்சம் தங்கத்தை, திரிசூலம் மெட்ரோ ரயில்  நிலைய அதிகாரிகள் சோதனை செய்து, பறிமுதல் செய்தனர். தற்போது, மீண்டும் இதேபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. முறையாக சோதனை நடத்தி, கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்ய வேண்டிய அதிகாரிகள் சிலர், பெயரளவுக்கு சில கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்துவிட்டு, கடத்தல்காரர்களுடன் கைகோர்த்து, பெரிய அளவிலான கடத்தலுக்கு  உடந்தையாக இருப்பதே இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Tags : airport ,station ,
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...