பள்ளிக்கரணையில் மகனுடன் மொபட்டில் சென்ற போது கொள்ளையன் பையை பறித்தபோது தடுமாறி சாலையில் விழுந்த பெண் பலி

* பைக் கொள்ளையர்கள் அட்டகாசத்தால் வெளியில் செல்ல பொதுமக்கள் அச்சம்

* சிசிடிவி பதிவு இருந்தும் 15 நாட்களாக குற்றவாளியை பிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்

சென்னை, டிச.7: சென்னை பள்ளிக்கரணையில் மகனுடன் மொபட்டில் சென்ற  பைக் கொள்ளையன்  தாக்கி கைப்பையை பறித்த போது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பெண் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். பைக் கொள்ளையர்களின் அட்டகாசத்தால் பொதுமக்கள் வெளியில் செல்லவே அச்சமடைந்துள்ளனர். சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பாரதிநகர் நம்மாழ்வார் தெருவை சேர்ந்தவர் முருகலட்சுமி (55), கேட்டரிங் தொழில் செய்து வரும் இவர், கடந்த 22ம் தேதி இரவு, மகன் சுந்தரபாண்டியனுடன் மொபட்டில் மேடவாக்கத்தில் இருந்து வேளச்சேரிக்கு சமையல் ஆர்டர் எடுப்பதற்காக சென்று கொண்டிருந்தார். பள்ளிக்கரணை தனியார் பல் மருத்துவமனை அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, பின்னால்  மின்னல் வேகத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக்கில் வந்த மர்ம ஆசாமி, ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்து இருந்த முருகலட்சுமியை தாக்கி அவரிடம் இருந்து கைப்பையை பிடித்து இழுத்துள்ளார். அப்போது, முருகலட்சுமி நிலை தடுமாறி மொபட்டில் இருந்து சாலையின் நடுவே பின் புறமாக கீழே விழுந்தார். கொள்ளையன் கைப்பையுடன் மாயமாகி விட்டான்.

ஸ்கூட்டர் வேகத்தின் காரணமாக முருகலட்சுமி சாலையில் சிறிது தூரம் உருண்டு படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். அவருக்கு தலையில் பலமாக காயம் ஏற்பட்டதால் ரத்தம் கொட்டியது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் அவரது மகன் சுந்தரபாண்டியன், முருகலட்சுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.தலையில் ஏற்பட்ட காயத்தால் ரத்தம் வெளியேறி கொண்டிருந்ததால் மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் பரிந்துரைப்படி கொருக்குப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முருகலட்சுமி அனுமதிக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து முருகலட்சுமி மகன் சுந்தரபாண்டியன் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று பார்த்த போது, ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் முருகலட்சுமியை தாக்கி கைப்பையை பறிக்கும் காட்சி பதிவாகி இருந்தது. இரவு நேரம் என்பதால் பைக் பதிவு எண் சரியாக தெரியாததால் குற்றவாளியை இன்னும் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த முருகலட்சுமி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

அதைதொடர்ந்து போலீசார் வழிப்பறி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். சம்பவம் நடந்து 15 நாட்கள் ஆன நிலையில் இதுவரை வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் கைது செய்ய வில்லை. முருகலட்சுமி இறந்த பிறகுதான் கொள்ளையன் குறித்து போலீசார் விசாரணை தொடங்கி உள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடரும் சம்பவங்கள்...

சென்னை மாநகரம் முழுவதும் ‘மூன்றாவது கண்’ என்ற திட்டத்தின் மூலம் 2 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாநகரம் முழுவதும் சிசிடிவி கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் ஆகியும் குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த ஆண்டு மென்பொறியாளர் லாவண்யா இரவு பணி முடிந்து அறைக்கு மொபட்டில் திரும்பிக் கொண்டிருந்த போது, வழிப்பறி கொள்ளையர்கள் இரும்பு கம்பியால் தாக்கி நகை மற்றும் லேப்டாப்பை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் அதே பள்ளிக்கரணை பகுதியில் மொபட்டில் சென்ற பெண்ணை தாக்கி வழிப்பறி செய்ததில், அவர் தடுமாறி விழுந்து இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>