நடைமுறைப்படுத்தும் பணி தீவிரம் மெட்ரோ ரயிலில் ‘ஒரே நாடு ஒரே கார்டு’ திட்டம்

சென்னை: மத்திய அரசு அனைத்து துறைகளிலும் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி டிஜிட்டல் நடைமுறைகளை புகுத்தி வருகிறது. இந்நிலையில், போக்குவரத்து துறையை டிஜிட்டல் மயமாக்கும் விதமாக கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி ‘ஒரே நாடு ஒரே கார்டு’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தின் கீழ், தேசிய அளவில் இயங்கும் பஸ், மெட்ரோ ரயில் கட்டணம், ரயில் நிலைய டிக்கெட், பார்க்கிங், ஷாப்பிங் உள்ளிட்டவைகளுக்கு ஒரே கார்டை பயன்படுத்தி கட்டணம் செலுத்த முடியும்.

இந்த திட்டத்தை சென்னை மெட்ரோ ரயிலில் செயல்படுத்த அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். வங்கிகளில் வழங்கப்படும் டெபிட் கார்டு போன்ற இந்த கார்டை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் கட்டணத்தை செலுத்த முடியும். இதற்கான திட்டப்பணிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:  

‘நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு’ என்று அழைக்கப்படும் இந்த கார்டை பயன்படுத்தி அனைத்து போக்குவரத்திலும் எளிதாக பணம் செலுத்த முடியும். சென்னை மெட்ரோ ரயிலில் இதை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. டெல்லி மெட்ரோ ரயிலில் சோதனை முறையில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக, கொச்சியில் இத்திட்டம் உள்ளது. தற்போது, சென்னை மெட்ரோ ரயிலில் இந்த கார்டை பயன்படுத்தும் வகையில் இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்நுழையும் இயந்திரத்தில் கார்டை ஸ்வைப் செய்தாலே போதும். அதற்கான கட்டணம் பதிவாகிவிடும். பின்பு எளிதாக நிலையத்திற்குள் செல்லலாம்.   வங்கி கணக்குடன் இந்த கார்டு இணைக்கப்பட்டதால் போக்குவரத்திற்கு  நாம் எவ்வளவு செலவு செய்துள்ளோம் என்பதன் விவரமும் தெளிவாக தெரிந்துவிடும். குறிப்பாக, மாதாந்திர  வங்கி விவரத்திலேயே மெட்ரோவில் பயணம் செய்த விவரங்களும் பதிவாகிவிடும். திட்டத்தை விரைந்து செயல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது. மிகப்பெரிய நடைமுறை என்பதால் சென்னை மெட்ரோவில் இதை முழுமையாக நடைமுறைப்படுத்த குறைந்தது 8 முதல் 10 மாதம் வரையில் ஆகும். இவ்வாறு கூறினார்.

Related Stories:

>