காலி இடத்தில் அவசர கதியில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்ததில் தொழிலாளி பரிதாப பலி : பெண் உள்பட 6 பேர் படுகாயம்

புழல்: செங்குன்றம் அருகே காலி இடத்தில் புதிதாக கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு கூலி தொழிலாளி பரிதாபமாக பலியானார். மேலும், பெண் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. செங்குன்றம் அருகே பம்மதுகுளம் ஏரியின் பின்புறம், லட்சுமிபுரம், கங்கை அம்மன் கோயில் அருகே சுமார் 50 சென்ட் இடத்தில் கடந்த ஒரு வாரமாக அவசர கதியில் புதிய சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இதில் அதே பகுதியை சேர்ந்த 7 கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். சுமார் 70 அடி நீளம், 10 அடி உயரம் கொண்ட 3 பக்க சுற்றுச்சுவர் கட்டப்பட்டு ஈரம் காயாத நிலையில், நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் 4வது பக்க சுவர் கட்டும் பணியில் 7 கட்டிட கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஈரம் காயாத நிலையில் இருந்த சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. பணியில் இருந்த பொத்தூரை சேர்ந்த லோகநாதன் (50), வள்ளிவேலன் நகரை சேர்ந்த லலிதா (50), செல்லப்பன் (47), தேவராஜ் (65), குமார் (45), எல்லம்மன்பேட்டையை சேர்ந்த பாபு (45), செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த முத்து (40) ஆகிய 7 பேரும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 7 பேரையும் மீட்டு, பாடியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பொத்தூரை சேர்ந்த செல்லப்பன் (47) என்பவர் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், தற்போது பெய்து வரும் மழையில் பம்மதுகுளம் ஏரி நிரம்பி, இந்த இடத்துக்கு தண்ணீர் வந்துவிடும் என்பதால் சுற்றுச்சுவர் கட்டும் பணி அவசரகதியில் நடைபெற்றதாக தெரியவந்தது. இதையடுத்து நிலத்தின் உரிமையாளர் மற்றும் கட்டுமான பணிகளின் நிர்வாகி உள்ளிட்ட பலரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>