மயிலாப்பூரில் பரபரப்பு கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர விசாரணை

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில். பாதுகாப்பு கருதி பக்தர்கள் அனைவரும் சோதனை செய்யப்பட்ட பிறகே இந்த கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்துக்கு நேற்று கடிதம் ஒன்று வந்தது. அதில், திருவல்லிக்கேணி மசூதி தெரு முகமது ஹனிபாகவி என்பவர் பெயரில் எழுதப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதத்தில், டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பதிலடியாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. இதை படித்து அதிர்ச்சியடைந்த கோயில் கண்காணிப்பாளர் உடனடியாக இணை ஆணையர், தக்காருக்கு தகவல் அளித்தார். இதுகுறித்து இணை ஆணையர் காவேரி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து மெட்டல் டிடெக்டர் உதவியுடன் கோயில் வளாகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை. எனினும் இன்று டிசம்பர் 6ம் தேதி என்பதால் போலீசார் கோயிலில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் உள்ளனர். மேலும் பக்தர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Advertising
Advertising

மேலும், இரவிலும் கோயில் பகுதியில் ரோந்து செல்ல போலீசாருக்கு மயிலாப்பூர் துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் அறிவுரை வழங்கியிருக்கிறார்.  இந்நிலையில் கோயில் இணை ஆணையர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளும்படி அறநிலையத்துறை கமிஷனர் அறிவுரை வழங்கியுள்ளார். அதில், சென்ற ஆண்டு கோயில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதை போல் இந்தாண்டும் பாதுகாப்பினை பலப்படுத்த கோயில் செயல் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். டிசம்பர் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை அனைத்து சார்நிலை அலுவலர்கள் 23 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும். கோயில் வளாகத்தில் சந்தேகப்படும் படியாக பொருள் இருப்பின் அதை காவல்துறையினரால் கவனமாக ஆய்வு செய்து அகற்ற வேண்டும். சந்தேகப்படும்படியாக நபர்கள் யாரேனும் வந்தால் தக்க விசாரணை செய்ய வேண்டும்.  எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எவையேனும் காணப்பட்டால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். பக்தர்கள் கொண்டு வரும் பை மற்றும் இதர பொருட்களை அவர்கள் மனம் புண்படாமல் சோதனை செய்ய வேண்டும்.

கோயில் வெளிப்புறங்களில் அமைந்துள்ள வாகனங்கள் நிறுத்துமிடம், பொருட்கள் பாதுகாப்பு அறை போன்ற போன்ற கோயில் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் ஐயத்திற்கிடமான வகையில் வாகனங்களோ அல்லது பொருட்களோ இருப்பின் அவை குறித்து உடன்  காவல்துறைக்கு தகவல் அளித்து சோதனை செய்ய வேண்டும். கோயில்களில் பயன்படுத்தப்படாத அறைகள் இருப்பின் அவற்றை உடன் திறந்து பார்த்து சோதனை செய்து நன்கு பூட்டி பாதுகாக்க வேண்டும். சுவர்கள், கதவுகள், மேற்கூரையில் துளைகள், துவாரங்கள் இருப்பின் அவற்றை அடைத்து வைப்பது கோயில்களுக்கு பாதுகாப்பாக அமையும். கோயில்களில் உள்ள உலோக ஆய்வு கருவிகளை மெட்டல் டிடெக்டர் மூலம் நன்கு சோதனை செய்து சரிபார்த்து தேவையான நேரங்களில் பயன்படுத்த வேண்டும். ஹேண்ட் மெட்டல் டிடெக்டர், டோர்மெட்டல் பிரேம் பயன்படுத்தவும். கோயில்களில் ஐபி கேமரா நல்லமுறையில் இயங்குகின்றனவா என்று அவ்வபோது சரிபார்க்க வேண்டும். எவ்வித நிகழ்வுகளில் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். அனைத்து சார்நிலலை அலுவலர்களும் டிசம்பர் 7 வரை தலைமையிடத்தில் இருக்க வேணடும் என்று கோயில் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

Related Stories: