சிறுபான்மையின மக்களுக்கு தனியாக மேம்பாட்டு கழகம்

புதுச்சேரி, டிச. 5:  புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடந்த சிறுபான்மையினர் தின விழாவில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் பேசியதாவது: சிறுபான்மையினருக்கு விழா எடுப்பது மட்டும் அரசின் கடமையாக இல்லாமல் அந்த மக்களின் நலனில் அக்கறை எடுத்து பாதுகாக்க வேண்டியதும் அரசின் கடமையாகும். ஆனால் இந்த ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த ஒரு திட்டத்தையும் சிறுபான்மை மக்களின் நலனுக்காக செயல்படுத்தவில்லை. குறிப்பாக சிறுபான்மையின மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அந்த மக்களுடைய நலனுக்காக பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை.

Advertising
Advertising

கடந்த 4 ஆண்களுக்கு மேலாக வக்பு வாரிய தலைவர் நியமிக்கப்படாததால், வக்பு வாரியம் செயலிழந்து போயுள்ளது. அதேபோன்று புதுச்சேரி அரசில் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகம் இணைந்துள்ளது. இதனால் சிறுபான்மையினருக்கு தேவையான அரசின் உதவிகள் அந்த மக்களை சென்றடையவில்லை. எனவே பிற் படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழகத்தில் இருந்து பிரித்து தனியாக சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகம் ஆரம்பிக்கப்பட வேண்டும். தகுதியான முஸ்லிம், கிறிஸ்தவ மக்களுக்கு அரசின் சார்பில் இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். முஸ்லிம்களின் சொத்துக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சிறுபான்மையின மக்களுக்கு கடன் வழங்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக ஒரு முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு கூட இந்த கடன் உதவி வழங்கப்படவில்லை. வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் முஸ்லிம் குடும்ப தலைவர்களின் பெயர்கள் ரேஷன் அட்டையில் இருந்து நீக்கப்படுகின்றன. அதனால் குடும்பத்தில் உள்ள பெண்கள் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதையும் சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: