கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை பெறுவதில் முறைகேடு

புதுச்சேரி, டிச. 5:  புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை முதியோர், விதவை, திருநங்கை, முதிர்கன்னி மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் என்ற அடிப்படையில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்நிலையில் கணவருடன் சேர்ந்து வாழும் பல பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண் என்கிற அடிப்படையில் உதவித்தொகை பெற்று வருகின்றனர். புதுச்சேரியில் 9,380 பேருக்கு ஒரு கோடியே 40 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய், காரைக்காலில் 571 பேருக்கு 8 லட்சத்து 56 ஆயிரத்து 500 ரூபாய், மாகேயில் 68 பேருக்கு ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாய், ஏனாமில் 195 பேருக்கு 2 லட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாய் என மொத்தம் 10,214 பேருக்கு ஒரு கோடியே 53 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் என ஆண்டுக்கு ரூ.18 கோடியே 32 லட்சத்து 52 ஆயிரம் செலவிடப்பட்டு வருகிறது. பொதுவாக பிற பிரிவுகளின் பயனாளிகள் உதவித்தொகை பெற வயது சான்றிதழ், கணவரின் இறப்பு சான்றிதழ் போன்றவற்றின் அடிப்படையிலும், வருவாய் துறை சான்றிதழ் அடிப்படையிலும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஆனால், கணவரால் கைவிடப்பட்டோர் என்ற பிரிவில் பயனடையும் அனைவரும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முக்கிய பிரமுகர்களின் பரிந்துரைப்படி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் பயனாளிகள் அளிக்கும் ஆவணங்கள் முறையாக ஆய்வு செய்யப்படுவதில்லை. மேலும், கணவரால் கைவிடப்பட்டோர் என்கிற அடிப்படையில் உதவித்தொகை பெற 7 ஆண்டுகள் கணவருடன் சேர்ந்து வாழவில்லை என அவர்கள் அளிக்கும் ஒப்புதல் சான்றிதழுடன், கணவர் பெயர் நீக்கம் செய்யப்பட்ட குடும்ப அட்டையின் நகலையும் கேட்டுப் பெற வேண்டும். ஆனால், எம்எல்ஏக்கள் பரிந்துரை செய்வதால் கணவரின் பெயர் நீக்கப்பட்டுள்ளதா என அங்கன்வாடி ஊழியர்கள் ஆய்வு மேற்கொள்ளாமல் அப்படியே அவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகின்றனர்.  இதனால் அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல கோடி இழப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாது, பிற பிரிவுகளில் விண்ணப்பித்துள்ள உண்மையான பயனாளிகளுக்கு நிதி பற்றாக்குறையால் உதவித்தொகை வழங்க முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர்  ரகுபதி கூறுகையில், `கணவருடன் சேர்ந்து வாழும் பல பெண்கள் எம்எல்ஏக்களின் பரிந்துரையின் பேரில் கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை பெற்று வருகின்றனர். இதனால் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்படுகிறது. எனவே, கணவரால் கைவிடப்பட்டோர் பிரிவில் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளின் குடும்ப அட்டைகளை ஆய்வு செய்ய வேண்டும். அதில் அவர்களின் கணவர் பெயர் நீக்கம் செய்யப்பட்டு இருந்தால் மட்டுமே அவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கவர்னர், முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளேன். அதனை அவர்கள் உரிய பரிசீலனை செய்து அரசு நிதி கோடி கணக்கில் முறைகேடாக வீணடிக்கப்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories:

>