வாய்க்காலில் அடைப்பு அகற்றப்படாததால் ஊசுட்டேரிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது

திருக்கனூர், டிச. 5:  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வீடூர் அணை உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக, வீடூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த உபரிநீர் சங்கராபரணி ஆற்றின் வழியே இளையாண்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, கைக்கிளைப்பட்டு, பிள்ளையார்குப்பம், வில்லியனூர், திருக்காஞ்சி வழியாக சென்று கடலில் கலக்கிறது. இந்நிலையில் திருக்கனூர் அடுத்த கைக்கிளைப்பட்டு படுகை அணைக்கு வரும் தண்ணீர், அங்கிருந்து கிளை வாய்க்கால் வழியாக காட்டேரிக்குப்பம், துத்திபட்டு, பிள்ளையார் குப்பம், பத்து கண்ணு வழியாக ஊசுட்டேரிக்கு வருகிறது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பத்து கண்ணில் உள்ள மதகுகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, வாய்க்காலின் குறுக்கே தற்காலிக சாலை அமைக்கப்பட்டது.

Advertising
Advertising

பணிகள் முடிந்த பிறகு தற்காலிக சாலையை ஒப்பந்ததாரர்கள் அகற்றாமல் சென்றனர். இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த கனமழையால் ஊசுட்டேரிக்கு வரும் கிளை வாய்க்காலில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், வாய்க்காலில் உள்ள அடைப்பால் தடையின்றி தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஊசுட்டேரிக்கான தண்ணீர் வரத்து

குறைந்துள்ளது. எனவே, புதுவை அரசு உடனடியாக வாய்க்காலில் உள்ள அடைப்பை அகற்றி ஊசுட்டேரிக்கு தடையின்றி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: