குட்கா, கஞ்சா விற்கக் கூடாது புதுவை வியாபாரிகளுக்கு முதல்வர் எச்சரிக்கை

புதுச்சேரி, டிச. 5: புதுவை வியாபாரிகள் குட்கா, கஞ்சா மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ள முக்கிய செய்திக்குறிப்பு:- கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வது புதுச்சேரியில் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. புகையிலை என்ற பெயரில் இளைஞர்கள் மத்தியில் குட்கா விற்பனை செய்து இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்குவதாக புகார் வந்துள்ளது கடைகளில் எக்காரணம் கொண்டும் எந்த விதமான குட்கா போன்ற போதை பொருளும் விற்பனை செய்யக்கூடாது. குறிப்பாக பள்ளிக்கூட மாணவர்களிடமும், கல்லூரி மாணவர்களிடமும் குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்து மாணவர்களின் எதிர்காலத்தை குறிப்பாக இளைஞர்களின் எதிர்காலத்தை வீணாக்குவது தொடர்பாக புகார்கள் வருகின்றன. குட்கா வியாபாரம் செய்பவர்கள் போதை பொருட்களை பயன்படுத்துபவர்களின் எதிர்காலம் வீணாகி விடுகிறது என்பதை உணர்ந்து, போதை பொருட்களை பயன்படுத்துபவர்கள், அந்த சிறு பிள்ளைகளும் தங்களுடைய பிள்ளைகளாகவும் இருக்கலாம் என்ற உணர்வுடன் மேற்கண்ட பொருட்களை விற்பனை செய்யக் கூடாது.

இதுதொடர்பாக காரைக்காலில் குட்கா என்ற பெயரில் போதை பொருட்களை விற்பனை செய்வதும் புகையிலை என்ற பெயரில் குட்கா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு விற்பனை செய்பவர்களை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே வியாபாரிகள் அனைவரையும் நான் வேண்டிக் கேட்டுக் கொள்வது, எக்காரணம் கொண்டும் எந்த விதமான கஞ்சா போன்ற போதைப் பொருட்களையும் குட்கா பொருள் விற்பனையும் செய்யக்கூடாது. காவல் துறையினருக்கு கடைகளில் சோதனை செய்து குட்கா விற்பனை செய்வதை முழுவதும் தடை செய்யவும் உத்தரவிட்டுள்ளேன். எனவே வியாபாரிகள் கடைகளில் குட்கா போதைப்பொருள் எதையும் விற்பனை செய்ய வேண்டாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>