×

மரக்காணம் பகுதியில் கனமழையால் மரக்கரி வியாபாரம் பாதிப்பு

மரக்காணம், டிச. 5: மரக்காணம் பகுதியில் கந்தாடு, கீழ்பேட்டை, காணிமேடு, மண்டவாய், அனுமந்தை, கொள்ளுமேடு உள்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் உள்ள பெரும்பாலானோர்  விவசாயிகள் ஆவர். இவர்கள் தங்களது விளை நிலங்களில் நெல், மணிலா, தர்பூசணி, எள், மரவள்ளி போன்ற பயிர்களை நடவு செய்வது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் போதிய அளவு பருவ மழை பெய்யவில்லை. இதனால் இங்கு நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து விட்டது. இது போல் பருவமழை பொய்த்து விவசாயம் நலிவடைந்து வருவதால் பலபேர் விவசாய தொழிலை விட்டு விட்டு வேலை தேடி சென்னை, புதுவை ஆகிய பெரு நகரங்களுக்கு சென்று விட்டனர்.

இதனால் இப்பகுதியில் உள்ள பல விவசாயிகள் விவசாய பயிர்களுக்கு  மாற்றாக தங்களது விளை நிலங்களில் சவுக்கு, தைலம் போன்ற மரங்களை வளர்த்து வருகின்றனர். இந்த மரங்களை குறைந்தது 5 ஆண்டுக்கு பிறகு விற்பனை செய்கின்றனர். இதுபோல் விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு நல்ல லாபமும் கிடைக்கிறது. இதனால் இந்த மரங்களை சில வியாபாரிகள் வாங்கி அவற்றை பக்குவமான முறையில் கரியாக மாற்றி வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதுபோல் மரங்களை வெட்டி கரியாக சுடுவதற்கு மழை இருக்க கூடாது.  ஆனால் தற்போது இங்கு தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால்  மரக்கரி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்த தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை