×

வடகிழக்கு பருவமழையால் 106 ஏரிகள் 100 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது

கடலூர், டிச. 5:கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 29, 30, டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் மாவட்டத்தில் தாழ்வான பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கடலூர் வட்டத்தில் 3 நிவாரண முகாம்களும், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் 2 முகாம்களும், விருத்தாசலம் வட்டத்தில் 2 முகாம்களும், சிதம்பரம் வட்டத்தில் 2 முகாம், காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் 3 முகாம்கள் என மொத்தம் 12 முகாம்கள் தொடங்கப்பட்டு 2,569 நபர்கள் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், உணவு மற்றும் மருத்துவ வசதிகள் ஆகியவை செய்து தரப்பட்டது. மேற்படி நபர்கள் உட்பட தண்ணீர் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ளவர்களையும் சேர்த்து சுமார் 17,803 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. தற்போது வெள்ளநீர் வடிந்துள்ள நிலையில் முகாம்களில் உள்ளவர்கள் அவரவர் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 54 மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியில் ஈடுபட்டு 2902 பயனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.  இதுதவிர மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த கால்நடைகளுக்கு இதுவரையில் 30 கால்நடை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. மேற்படி மருத்துவ முகாமில் 30 மருத்துவர்கள் கொண்டு 5100 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  கடலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 228 ஏரிகளில், 106 ஏரிகள் 100 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளது. 24 ஏரிகள் 91 முதல் 99 சதவீதமும், 12 ஏரிகள் 81 முதல் 90 சதவீதமும், 11 ஏரிகள் 71 முதல் 80 சதவீதமும், 27 ஏரிகள் 51 முதல் 70 சதவீதமும், 34 ஏரிகள் 26 முதல் 50 சதவீதமும், 13 ஏரிகள் 1 முதல் 25 சதவீதமும் நிரம்பியுள்ளது என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Tags : lakes ,monsoon ,Northeast ,
× RELATED ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டின