பாபர் மசூதி இடிப்பு தினம் ரயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை

புவனகிரி, டிச. 5: டிசம்பர் 6ம் தேதி(நாளை) பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக காவல்துறை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ரயில்வே போலீசார் சிதம்பரம் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர். சிதம்பரம் ரயில்வே காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் தலைமையில், போலீசார் சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர். பின்னர் ரயில்வே நடைபாதையில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகளிடமும் சோதனை நடத்தப்பட்டது.

இதை தொடர்ந்து சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்காக சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளிலும் ஏறி போலீசார் சோதனை நடத்தினர். ரயில் பெட்டிக்குள் பயணிகளின் உடமைகள் உள்ளிட்டவற்றை மெட்டல் டிடெக்டர் மூலம் போலீசார் சோதனை செய்தனர். பின்னர் ரயில்கள் சென்ற பிறகு தண்டவாளத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு மெட்டல் டிடெக்டர் மூலம் தண்டவாளங்களிலும் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Babri Masjid Demolition Day ,
× RELATED பாபர் மசூதி இடிப்பு தினம் விமான...