×

எம்.எல்.ஏ, கலெக்டர் ஆய்வு ராஜபாளையம் வட்டாரத்தில் நெற்பயிரில் குலைநோயா?

ராஜபாளையம், டிச. 5: நெற்பயிரில் குலைநோயை கட்டுப்படுத்த வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையா ஆலோசனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: ராஜபாளையம் வட்டாரத்தில் தற்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. தொடர்மழை, தூறல், அதிகமாக தழைச்சத்து பயன்படுத்துவதால், நெற்பயிரில் குலைநோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புண்டு. இதன் அறிகுறிகள் வருமாறு: நெற்பயிரின் இலைகள், தண்டு, கணுப்பகுதி, கழுத்துப்பகுதி, கதிர் ஆகியவை பூசணத்தால் தாக்கப்பட்டிருக்கும். இலைகளின் மேல் வெண்மை நிறத்திலிருந்து சாம்பல் நிற மையப்பகுதியுடன் காய்ந்த ஓரங்களுடன் கூடிய, கண் வடிவ புள்ளிகள் காணப்படும். பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய ஒழுங்கற்ற திட்டுக்களை உருவாக்கும். தீவிர தாக்குதலின்போது, பயிர் முழுவதும் எரிந்தது போல இருக்கும்.

இந்த நோயை கட்டுப்படுத்த, வயல் மற்றும் வரப்புகளில் உள்ள களைகளை அகற்ற வேண்டும். வயலில் நோய் தோன்றும்போது செடிகளுக்கு ஹெக்டேருக்கு எடிபென்பாஸ் 500 மி.லி. அல்லது மேன்கோசெப் 1 கிலோ அல்லது கிட்டாசின் 250 கிராம் அல்லது டிரைசைக்ளோசோல் 400 கிராம் ஆகியவை தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். சூடோமோனாஸ், ஃபுளோரோசன்ஸ் என்ற உயிரியல் பூஞ்சான கொல்லியை 0.5 சதவீதம் மூன்று முறை  தெளிக்க வேண்டும். அதிக அளவு தழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் சூடோமோனாஸ் வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் உள்ளது. இதனை விவசாயிகள் வாங்கி பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : MLA ,Collector ,Rajapalayam ,
× RELATED மைசூருவில் ஆய்வு கூட்டத்தில்...