×

திருச்சுழியில் ‘பார்’ ஆனது கோயில் வளாகம்

திருச்சுழி, டிச. 5: திருச்சுழியில் கோயில் வளாகத்தை மினி பார் ஆக மாற்றி வரும் குடிமகன்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சுழியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பிரசித்திபெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் விழாவில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் சுமார் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வர். இக்கோயில் குளத்தில் குளித்தால் நோய் தீரும் என்பது ஐதீகம். இந்நிலையில், கோவில் வளாகத்தில் தினசரி காலை முதல் மாலை வரை சமூக விரோதிகள் மது அருந்துவதாக புகார் தெரிவிக்கின்றனர். மது அருந்தியவர்கள், கோயில் வளாகத்தில் கண்காணிப்புக்காக அமைக்கப்பட்ட சிசிடிவியை உடைத்துள்ளனர். இது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. குடிமகன்களால், பெண்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்கின்றனர்.

எனவே, கோயில் வளாகத்தை ‘மினிபார்’ ஆக்கும் குடிமகன்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்த அவர்கள் கூறுகையில், ‘மாரியம்மன் கோயில் அருகில்  சுழிகை சொக்கியப்பன் கோயில் உள்ளது. இப்பகுதியில், காலை முதல் மாலை வரை  பத்துக்கும் மேற்பட்ட கும்பல்கள் அப்பகுதியில் திரிவதால் பெண்கள்  கோயிலுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.  திருச்சுழியில் டிஎஸ்பி அலுவலகம், காவல்நிலையம் இருந்தும்,  கோயில் வளாகத்தை ‘பார்’ ஆக மாற்றி வருகின்றனர். இது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, போலீசார் கோயில் வளாகத்தில் மது அருந்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : bar ,Tiruchi ,
× RELATED இன்று ஜெயந்தி விழா ஆஞ்சநேயர் கோயில் வளாகம் 2 டன் பூக்களால் அலங்கரிப்பு