விவசாயிகள் கோரிக்கை மாவட்ட சாலையோர கடைகளில் தரமற்ற எண்ணெய் மூலம் பலகாரம், சிக்கன் 65 தயாரிப்பு

தேனி, டிச.5: தேனி மாவட்டத்தில் சாலையோரம் உள்ள பலகாரக்கடைகளில் பலமுறை உபயோகப்படுத்திய எண்ணெய்யால் பலகாரங்கள் தயாரிப்பதை தடுக்க உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மாலை நேரங்களில் சட்னி கலந்த பலகாரங்களை உண்பதில் பலருக்கு விருப்பம் அதிகம். இந்த சுவைப்பிரியர்களை குறிவைத்து சாலையோரங்களில் நடமாடும் தள்ளுவண்டிகளில் பலகாரக்கடைகள் ஏராளமாக இயங்கி வருகின்றன. இத்தகைய பலகாரக்கடைகளை பொறுத்தவரை தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, சின்னமனூர், கம்பம் என மாவட்ட அளவில் பரவலாக பொதுமக்கள் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. தேனி நகரில் மதுரை ரோடு, கம்பம் ரோடு, பெரியகுளம் ரோட்டில் ஏராளமான கடைகள் உள்ளன. இத்தகைய சாலையோர பலகாரக்கடைகளில் உளுந்து வடை, பருப்பு வடை, முட்டை போண்டா, கீரைவடை போன்ற வடை வகைகள் தயாரிக்கப்பட்டு அதே இடத்தில் விற்பனை செய்யப்படுகிறது. மாலைநேரத்தில் இத்தகைய கடைகளில் கூட்டம், கூட்டமாக பொதுமக்கள் சென்று வடைகளை வாங்கி உண்பதை பழக்கப்படுத்தி உள்ளனர்.

இதில் ஒரு சிலக்கடைகள் தவிர பெரும்பாலான கடைகளில் பெரிய ஓட்டல்களில் பயன்படுத்தப்பட்ட எண்ணெயை குறைந்த விலைக்கு வாங்கி வந்தும், பலமுறை உபயோகித்த எண்ணெயிலும் வடைகளை தயாரிக்கின்றனர். இப்படி தயாரிக்கப்படும் பலகாரங்களை உண்பதால் பொதுமக்களுக்கு அஜீரணக்கோளாறுகள் ஏற்படும் அவலநிலை உள்ளது. பலகாரக்கடைகளை போலவே, மதுப்பிரியர்களை குறிவைத்து, எண்ணெயில் பொறித்த சிக்கன் 65 விற்பனை செய்யும் சாலையோர தள்ளுவண்டி கடைகளும் அதிக அளவில் உள்ளன. இத்தகைய கடைகளில் பழைய கோழிக்கறி மற்றும் பழைய பொறித்த சிக்கன் 65 ஆகியவற்றை மீண்டும் சூடுபடுத்தி விற்பனை செய்யும் அவலம் உள்ளது. ஏற்கனவே, மது அருந்தி உடல் உறுப்புகளை பாதிக்கச் செய்யும் மதுப்பிரியர்கள் இத்தகைய தரமற்ற சிக்கன் சாப்பிடுவதாலும் மேலும் உடல்உபாதைகளுக்கு ஆளாகும் நிலை உள்ளது.

தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதாலும், இதனைத் தொடர்ந்து பனிகாலம் துவங்குவதாலும் இயற்கையாகவே மனித உடலில் ஜீரண மண்டல செயல்பாடு குறையும் என்கிற நிலையில், தரமற்ற எண்ணையால் தயாரிக்கப்படும் பலகாரங்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மாவட்ட அளவில் அனைத்து நகரங்களிலும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உள்ள நிலையில், பொதுமக்களின் நலன்கருதி அடிக்கடி இத்தகைய சாலையோர பலகாரக்கடைகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : District Roadside Stores ,
× RELATED கட்டிய வீட்டக் காணோம்... கலெக்டரிடம் விவசாயி புகார்