×

உழவர் சந்தைக்கு வெளியே சாலையோர கடைகள் அகற்றம்

பரமத்திவேலூர், டிச.5: பரமத்திவேலூர் உழவர் சந்தை அருகே, சாலையோரம் வைக்கப்பட்ட கடைகளை பேரூராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பரமத்திவேலூர் வாரச்சந்தை வளாகத்தில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இதில் 26 கடைகள் உள்ளன. முறையான அனுமதி அட்டை பெற்ற விவசாயிகள், உழவர் சந்தையில் கடை வைக்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்த அட்டை பெறாத விவசாயிகள் மற்றும் ஒரு சில வியாபாரிகள், உழவர்சந்தை அருகே சாலையோரம் 20க்கும் மேற்பட்ட  கடைகளை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சாலையோர கடைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக, புகார்கள் எழுந்தன. இதையடுத்து, பரமத்திவேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையிலான அலுவலர்கள், சாலையோர கடைகளை அப்புறப்படுத்தி, கடைகளில் இருந்த காய்கறிகளை பறிமுதல் செய்தனர். இதற்கு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட காய்கறிகளை, அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருதரப்பினருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உழவர் சந்தைக்கு வெளியே விற்பனை செய்யும் விவசாயிகள் உழவர் சந்தை அட்டை பெற்றுக்கொள்ளவும், வியாபாரிகளுக்கு உழவர் சந்தை வளாகத்தை தவிர்த்து மாற்று இடங்களில் கடை அமைத்து வியாபாரம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Tags : roadside shops ,
× RELATED இந்தியாவில் கடந்த 7 மாதத்தில் கொரோனா...