×

உத்தமபாளையத்தில் மழையோ மழை கால்நடைகளுக்கு நோய் பரவ வாய்ப்பு

உத்தமபாளையம், டிச.5: உத்தமபாளையம் பகுதிகளில் மழையினால் கால்நடை தீவனங்கள் பசுமை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கால்நடைகளுக்கு நோய்கள் தாக்கும் ஆபத்து அதிகரித்துள்ளது. உத்தமபாளையம் கோட்டத்தில் உத்தமபாளையம், உ.அம்மாபட்டி, கோம்பை, தேவாரம், கம்பம், க.புதுப்பட்டி, ராயப்பன்பட்டி, கோகிலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. இதனால் கால்நடைகள் அதிகமாக வளர்க்கப்படும் இந்த பகுதிகளில் இயற்கை பசுமை தீவனங்களுக்கு தட்டுப்பாடு இல்லாத வகையில் அதிகளவில் வயல்கள், தோட்டங்கள், திறந்தவெளிகளில் கால்நடைகள் விரும்பி உண்ணக்கூடிய புல், இலை தழைகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. மாடுகள் வளர்ப்போர், ஆடுகள் வளர்ப்போர், எருமை மாடுகள் வளர்ப்பவர்கள் தினந்தோறும் மாட்டிற்கான தீவனங்களை அறுத்து செல்கின்றனர்.

பசுமையாக உள்ளதால் இதனை தின்பதில் கால்நடைகள் மறுக்கின்றன. காரணம் மழை தொடர்ந்து பெய்வதால் இலைகள் காயாமல் நன்றாக பசுமையாக காட்சியளிக்கிறது. இதனால் கால்நடைகளுக்கு பல்வேறு நோய்கள் வரக்கூட வாய்ப்புகள் உள்ளன. கழிச்சல், சீதக்கழிச்சல், இரைப்பைகளில் வரக்கூடிய புண்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் வர வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் கால்நடை வளர்ப்பவர்கள் கவலை அடைந்துள்ளனர். எனவே, மழைக்காலங்களில் பின்பற்றவேண்டிய ஆலோசனைகளை கூறாமல் கால்நடைத்துறை இழுத்தடித்து வருகிறது. இதுகுறித்து கால்நடை வளர்க்கும் தர்மர் கூறுகையில், `` தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கால்நடைகளை இயற்கையாக வளரக்கூடிய தீவனங்களை உணவாக கொடுப்பதில் பல பிரச்னைகள் ஏற்படும். அதிக மழை, அதிக வெப்பம் போன்றவற்றால் தான் கால்நடைகளுக்கு மனிதர்களை போல் பல்வேறு நோய்கள் வரும். எனவே, கால்நடைத்துறை உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும்’’ என்றார்.

Tags : Uthamapalayam ,
× RELATED தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும்