×

தலைமையாசிரியையை மாற்ற எதிர்ப்பு மாணவர்கள் திடீர் போராட்டம்

சிவகங்கை, டிச.4: சிவகங்கை அருகே முத்துப்பட்டி அரசுப்பள்ளி தலைமையாசிரியை மீது நடவடிக்கை எடுக்காமல் அவர் இதே பள்ளியிலேயே பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தலைமையாசிரியையாக கீதாஞ்சலி, அறிவியல் ஆசிரியையாக சங்கீதா பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 27ம் தேதி அறிவியல் ஆசிரியை சங்கீதா பள்ளியின் ஆய்வகத்தில் ஆய்விற்காக வைக்கப்பட்டிருந்த சோடியம் கார்பனைட்டை அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.

தலைமையாசிரியை கீதாஞ்சலி திட்டியதால் தான் தற்கொலைக்கு முயன்றதாக சங்கீதா புகார் அளித்தார். இதன் பேரில் கீதாஞ்சலி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பிரச்சினையால் தலைமையாசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்படும், அவர் வேறு பள்ளிக்கு மாற்றப்படுவார் என தகவல் கிடைத்தது. இதனிடையே அவரை வேறு பள்ளிக்கு மாற்றக்கூடாது. அவர் இதே பள்ளியில் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், கிராமத்தினர் பள்ளி முன் திடீரென போராட்டம் நடத்தினர். மாணவர்கள் பள்ளி வகுப்பறைக்குள் செல்லாமல் புறக்கணித்தனர். போராட்டம் நடத்தியவர்களிடம் மாவட்ட கல்வி அலுவலர் அமுதா, சிவகங்கை தாசில்தார் மைலாவதி பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து சுமார் ஒரு மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.

Tags : struggle ,
× RELATED மருத்துவ கல்லூரி மாணவர்கள் விசில் எழுப்பி போராட்டம்