×

பழுதான மடைகளால் வீணாகும் மழை நீரை தேக்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு

திருவாடானை, டிச.5:  திருவாடானை பகுதியில் கண்மாய்களில் மடைகள் பழுதாகி போனதால், மழை தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். திருவாடானை தாலுகா மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. வேறு எங்கும் இல்லாத அளவிற்கு அதிகமான கண்மாய் குளங்கள் உள்ளன. 200க்கும் மேற்பட்ட பெரிய கண்களும் 500க்கும் அதிகமான சிறுபாசன கண்மாய்களும் உள்ளன. பெரிய கண்மாய்களை பொதுப்பணி துறையும் சிறு பாசன கண்மாய்களை ஊராட்சி ஒன்றியமும் பராமரித்து வருகின்றன. பெரும்பாலான பெரிய கண்மாய்களில் பல ஆண்டுகளாக மடை கழுங்குகள் பழுதாகி ஓட்டை உடைசலாக மாறிவிட்டன. இதனால் மழை பெய்தும் கண்மாய்களில் தண்ணீரை தேக்கி வைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், குடிமராமத்து திட்டத்தில் அரசு கண்மாய்களை தூர்வாரி உள்ளது. 20 சதவீத கண்மாய்கள் மட்டுமே தூர்வாரப்பட்டு உள்ளது. அதிலும் மழை காலத்தில் பணியை துவங்கியதால் மடை கழுங்குகளை புதுப்பிக்க முடியவில்லை. இதில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத கண்மாய்களும் உள்ளன. தற்போது பருவ மழை நன்கு பெய்து கண்மாய்களில் தண்ணீர் தேங்கி வருகிறது. ஆனால் மடைகளில் பழுது ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்காமல் மடை வெளியே ஓடிக்கொண்டிருக்கிறது. விவசாயிகள் ஒன்று திரண்டு அடைக்க முயற்சித்தும் முடியவில்லை. கோடைகாலங்களில் கண்மாயில் தண்ணீர் இல்லாத நேரத்தில், மடையில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி செய்ய வேண்டும். தண்ணீர் நிரம்பிய பிறகு சரி செய்வது கஷ்டம். 3 ஆண்டுக்கு பிறகு தற்போது மழை பெய்துள்ள தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் கஷ்டப்படுகிறோம் என்றனர்.

Tags :
× RELATED ஆர்.எஸ்.மங்கலத்தில் மழைநீரில் மூழ்கிய...