×

ராமேஸ்வரம் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற காதில் பூச்சுற்றி ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம், டிச. 5:  ராமேஸ்வரத்தில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் ஐயப்ப பக்தர்கள் வருவது வழக்கம். இவர்களின் வருகையையொட்டி ராமேஸ்வரம் பேருந்து நிலைய பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தற்காலிக கடைகள் போடப்பட்டு வெளியூர் நபர்கள் வியாபாரம் செய்கின்றனர். இக்கடைகளில் ஸ்வெட்டர், ஜவுளி, ரெடிமேட் ஆடைகள் விற்பனை செய்யப்படுகிறது.
தற்காலிக சிற்றுண்டி மற்றும் தேனீர் கடைகளும் வைக்கப்படுகிறது. இதற்காக சாலையோர பிளாட்பாரத்தில் போடப்படும் நூற்றுக்கணக்கான தற்காலிக கடைகள், இங்குள்ள ஆளும் கட்சியினரால் போடப்பட்டு வெளியூர் வியாபாரிகளிடம் பல ஆயிரம் ரூபாய் வாடகைக்கு விடப்படுகிறது. இதில் ஏகப்பட்ட பிரச்னைகள் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது ராமேஸ்வரம் நகராட்சி பேருந்து வளாகத்திலும் ஆக்கிரமித்து இது போன்ற கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தின் பின்பகுதியில் வெளியூர் சுற்றுலா பேருந்து நிறுத்துமிடம், மின்சார வாரிய அலுவலகம், நீதிமன்றம் மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளி அமைந்துள்ளது. இதனால் ஏராளமான பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும், பள்ளி மாணவர்களும் நாள்தோறும் இங்கு சென்று வரும் நிலையில் இவர்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு கடைகள் போட்டுள்ளதால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அவதியடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் செய்தும் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படாததால் நகராட்சி நிர்வாகத்தின் மெத்தன போக்கை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் காதில் பூச்சுற்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகராட்சி பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ., தாலுகா குழு உறுப்பினர் ராமச்சந்திரபாபு தலைமை வகித்தார். கருணாமூர்த்தி முன்னிலை வகித்தார். பேருந்து நிலைய வளாகத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு கடைகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி நிர்வாகிகள் காதில் பூச்சுற்றி சங்கு ஊதி ஆர்ப்பாட்டம் செய்தனர். பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

Tags : Demonstration ,Rameswaram Bus Stand ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்