×

உள்ளாட்சித் தேர்தலில் உதவுவதற்காக? கண் துடைப்பாக மாற்றப்படும் பிடிஓக்கள்

மேலூர், டிச. 5: மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் மாற்றம் செய்யப்படுவது அரசியல்வாதிகளுக்கு உதவுவதற்காக கண் துடைப்பாக செய்யப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் வட்டார ஊராட்சி அலுவலராக சாந்தி செயல்பட்டு வந்தார். அவர் அலங்காநல்லூருக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்த பழனிச்சாமி கொட்டாம்பட்டிக்கு மாற்றப்பட்டார். இதே போல் ஏற்கனவே கொட்டாம்பட்டியில் பணியாற்றி தற்போது மதுரை கிழக்கில் பணியாற்றும் பாலச்சந்தர் கொட்டாம்பட்டி கிராம ஊராட்சி வட்டார அலுவலரகாக பணி மாற்றம் செய்யப்பட்டார். இதுவரை மாறுதல்கள் சரியாக நடந்து வந்தது போல் தெரிய, உடனடியாக மறுநாளே மீண்டும் இவர்கள் மாறுதல் செய்யப்பட்டனர். பழனிச்சாமியை மீண்டும் அதே அலங்காநல்லூருக்கு மாற்றி விட்டு, இங்கிருந்து வட்டார ஊராட்சி அலுவராக சென்ற சாந்தியை கொட்டாம்பட்டி கிராம ஊராட்சி அலுவலராக மாற்றம் செய்யப்பட்டார்.

ஏற்கனவே அங்கு மாறுதாலாகி வந்திருந்த பாலச்சந்தர் வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றம் செய்யப்பட்டார். மொத்தத்தில் எந்த இடத்தில் எந்த அதிகாரி நீடிக்க வேண்டும் என அரசியல்வாதிகள் விரும்புகிறார்களோ அதே இடத்தில் பெயரளவிற்கு ஒரு நாளுக்கு வேறு ஒன்றியத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு, மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதே நிலைதான் மேலூர் ஒன்றியத்திலும். வட்டார ஊராட்சி பிடிஓ ரத்தினகலாவதி இரு அறைகள் தள்ளி உள்ள கிராம ஊராட்சி பிடிஓவாக மாறுதல் செய்யப்பட்டுள்ளார். உள்ளாட்சி தேர்தலுக்கு தங்களுக்கு ஏற்கனவே நல்ல பழக்கம் உள்ள நன்றாக ஒத்துழைக்கும் அதிகாரிகளை தங்கள் பகுதியிலேயே வைத்து கொள்ள விரும்பிய அரசியல்வாதிகள் பெயரளவிற்கு பணி மாறுதல் என விளையாடி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags : elections ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...