×

ரூ.பல கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை பாதுகாக்க நடவடிக்கை அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை, டிச. 5: பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலத்தை பாதுகாப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, உத்தங்குடியைச் சேர்ந்த வக்கீல் பொன்கார்த்திகேயன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலையம் எதிரே கோதண்டராமஸ்வாமி கோயிலுக்கு சொந்தமான 9.49 ஏக்கர் நிலம் உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலங்கள் அறநிலையத்துறை இணை ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒத்தக்கடை ஊராட்சி பகுதியில் சேகரிப்படும் கழிவுகள் மற்றும் குப்பைகள் இந்த நிலத்தில்தான் கொட்டி எரிக்கப்படுகிறது. கோழி கழிவுகளும், சில்வர்பட்டறை கழிவுகளும் இங்குதான் கொட்டப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கிறது. இந்தக் கழிவுகளை உண்பதற்கான அதிகளவு நாய்கள் அந்தப் பகுதியில் கூடுகின்றன. நாய்களால் குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது.

சிலர் கோழி கழிவுகளை அருகிலுள்ள சுந்தரமாரியம்மன் கோயில் பகுதியிலும் கொட்டுகின்றனர். இதனால், கோயில் பகுதியில் ஒருவிதமான அமைதியற்ற நிலை நிலவுகிறது. அதே நேரம் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் இந்த நிலத்தை திறந்தவெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்துகின்றனர். இதனால், அந்தப் பகுதியே சுகாதாரமற்ற பகுதியாக மாறியுள்ளது. மேலும் சீமைக்கருவே மரங்கள் அதிகளவில் உள்ளதால், பலர் சமூகவிரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி செல்லும் மாணவர்களை தவறான பாதைக்கு தூண்டும் வகையிலான செயல்கள் அரங்கேறுகிறது.
இதனால், குடியிருப்பு வாசிகளுக்கும், பொதுமக்களும் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர். எனவே, விலை மதிப்புள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தை வேலி அமைத்து பாதுகாக்கவும், சம்பந்தப்பட்ட நிலத்தை சுகாதாரமாக பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் சம்பந்தப்பட்ட நிலத்தை சுத்தம் செய்து பாதுகாப்பது தொடர்பான நடவடிக்கைகளை கிழக்கு ஒன்றிய பிடிஓ, கோதண்டராம ஸ்வாமி கோயில் செயல் அலுவலர், ஒத்தக்கடை ஊராட்சி சிறப்பு அதிகாரி ஆகியோர் மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டு மென உத்தரவிட்டு விசாரணையை டிச.18க்கு தள்ளி வைத்தனர்.

Tags : Icort Branch ,
× RELATED குமாரபாளையத்தில் கோயில் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி