×

நீட் தேர்வு விண்ணப்பங்களை பள்ளிகளில் பதிவு செய்ய வேண்டும் மாணவர்கள் கோரிக்கை

பழநி, டிச. 5: நீட் தேர்விற்கான விண்ணப்பங்களை பள்ளிகளிலேயே பதிவு செய்ய வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு நீட் எனப்படும் போட்டி தேர்வினை கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இந்த ஆண்டிற்கான தேர்விற்கு விண்ணப்பிக்க வரும் டிச.31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான கட்டணம் பொதுப்பிரிவினருக்கு ரூ.1400ம், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு ரூ.750ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு கிராமப்புற ஏழை மாணவர்கள் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், விண்ணபிக்க தனியார் மையங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே, நீட் தேர்விற்கான விண்ணப்பங்களை பள்ளிகளிலேயே பதிவு செய்யும் முறையை ஏற்படுத்த கல்வித்துறை பரிசீலனை செய்ய வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மைய இயக்குநர் ராமமூர்த்தி கூறியதாவது, ‘அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் தனியார்களின் பிரவுசிங் சென்டர்களை நாட வேண்டி உள்ளது. இதனால் மாணவர்களுக்கு கூடுதல் பணம் செலுத்த வேண்டிய சூழலும், சிரமமும் ஏற்படுகிறது. இதை போக்கும் விதத்தில் அரசு பள்ளிகளில் மற்றும் அரசின் இ.சேவை மையங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் அனுப்பும் முறையை நடைமுறைப்படுத்த கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வு கட்டணத்தை அரசே ஏற்றுக் கொள்வது ஏழை மாணவர்களுக்கு மேலும் நன்மை ஏற்படவதாய் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : schools ,
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...