வரத்து குறைவால் முருங்கை விலை ரூ.600ஐ தொட்டது

திண்டுக்கல், டிச. 5: வரத்து குறைவால் திண்டுக்கல் மார்க்கெட்டில் முருங்கைக்காய் கிலோ ரூ.600க்கு விற்பனையாகிறது. திண்டுக்கல் நகரின் மையத்தில் மாநகராட்சி சொந்தமான காந்தி காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர், குஜிலியம்பாறை, வடமதுரை, வெள்ளோடு, கொடைரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளையும் காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இவற்றை சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது தொடர்மழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் காய்கறி செடிகள் அழுகி விட்டன. இதனால் வரத்து குறைந்து மார்க்கெட்டிற்கு 15 ஆயிரம் டன் காய்கறி வரக்கூடிய இடத்தில் 5 ஆயிரம் டன் காய்கறிகள் மட்டுமே வந்துள்ளது. இதில் வரத்து குறைவால் முருங்கை காய்க்கு தான் அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. மழைக்கு முன்பாக ஒரு கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கை காய் தற்போது வரத்து குறைவால் ஒரு கிலோ ரூ.600க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் (ஒரு கிலோ கணக்கில்) ரூ.40க்கு விற்கப்பட்ட கத்தரிக்காய் ரூ.120க்கும், ரூ.50க்கு விற்கப்பட்ட சின்னவெங்காயம் ரூ.120க்கும், ரூ.40க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம் ரூ.150க்கும் விலை உயர்ந்து விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தாலும், நடுத்தர, சாமானிய மக்கள் காய்கறி வாங்கி சமைப்பது அரிதாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்,’தற்போது ஐயப்ப சீசன், முகூர்த்தக்காலம் என்பதால் காய்கறிகள் விற்பனை அதிகளவில் நடக்கிறது. எனினும் வரத்து குறைவால் தேவை அதிகரித்து காய்கறிகளின் விலைகள் உச்சத்தை தொட்டுள்ளன. காய்கறிகளின் வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது’ என்றனர்.

Related Stories: