நத்தம் சாலைகளில் ‘திரும்ப.. திரும்ப..’ தரமற்ற பணி சமூகஆர்வலர்கள் குற்றச்சாட்டு

நத்தம், டிச. 5: நத்தம் நகரில் சேதமடைந்த சாலைகளில் மீண்டும் தரமற்ற பணிகளே செய்து வருவதாக சமூகஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நத்தம் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் சாலைகளிர் தண்ணீ–்ர் உருண்டோடுகிறது. இப்பகுதி சாலைகள் ஏற்கனவே குண்டும், குழியுமாக இருந்தன. தற்போது சாலையில் மழைநீர் தேக்கத்தால் வாகனஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். மேலும் சாலை பள்ளங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர். இதுகுறித்து தினகரனில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக சாலை பள்ளங்களில் கிரசர் தூசியுடன் ஜல்லிக்கற்களை கலந்து நிரப்பினர்.  ஆனால் மழையின் ஈரத்தாலும், வாகனங்கள் சென்றதாலும் சாலை பள்ளங்களில் நிரப்பப்பட்ட மணல்கள் கரைந்து ஜல்லிக்கற்கள் ஆங்காங்ககே சிதறின. இதனால் வாகனஓட்டிகள் பயணிப்பதற்கே அச்சம் நிலவி வந்தது. இந்நிலையில் மீண்டும் நெடுஞ்சாலைத்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் கிரசர் தூசியுடன் ஜல்லி கற்களை நத்தம் மூன்றுலாந்தர் அருகிலுள்ள கொட்டாம்பட்டி சாலை பள்ளங்களில் நிரப்பி வருகின்றனர். இதுபோல் தரமற்ற முறையில் பணிகள் நடப்பதால் தொடர்ந்து சாலைகள் போக்குவரத்திற்கு ஏதுவாக இல்லாமல் போய்விடுகிறது.

இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் நோ பார்க்கிங்கால் இடையூறு, குப்பை குவிப்பால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. நத்தம் பஸ்நிலையத்திலிருந்து தாலுகா அலுவலகம் செல்லும் வழியில் மீனாட்சிபுரம் பகுதியில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படும். தற்போது அந்த இடத்தில் குப்பைகளை கொட்டி வருவதால் சாலையில் வாகனங்களை நிறுத்தியுள்ளனர். இதனால் அவ்வழியே செல்பவர்கள் நடந்து செல்ல முடியாமல் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். நத்தம் காந்திஜி கலையரங்கம் பகுதி மழைக்கு சேறும், சகதியுமாக காணப்படுகிறது. மேலும் குப்பைகள் குவிக்கப்பட்டு கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், ‘நத்தம் கோட்டத்தை சேர்ந்த நெடுஞ்சாலை துறையினர் சேதமடைந்த சாலைகளை தரமான முறையில் சீர்செய்து வாகன போக்குவரத்திற்கு சிரமமின்றி ஏற்படுத்தி தர வேண்டும். சாலையின் மீது நிறுத்தியுள்ள வாகனங்களை ஒழுங்குமுறை செய்து சாலையின் ஓரங்களில் பொதுமக்கள் நடமாட ஏதுவாக செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நகர்ப்பகுதி மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள வர்த்தகர்கள் தங்களின் கழிவுப்பொருட்களை சாலைகளில் கொட்டாமல் பேரூராட்சி சார்பில் வரும் வாகனங்கள் அல்லது ஆட்களிடம் அவர்களால் வழங்கப்பட்ட கூடைகளில் சேமித்து வழங்க வேண்டும். அவ்வாறு பேரூராட்சி சார்பில் ஆட்கள் வராவிட்டால் அதுகுறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு செய்ய வேண்டும். பேரூராட்சி அதிகாரிகளும் அவ்வப்போது நகர்ப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு இதுபோன்று குறைகளை களைய வேண்டும்’ என்றனர்.

Related Stories:

>