×

குழந்தைகளை மீட்க சென்ற சைல்டு-லைன் ஊழியர்களுடன் வாக்குவாதம்

திருப்பூர், டிச.5:  திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த இரு சிறுமிகளை சைல்டு-லைன் அமைப்பினர் மீட்டனர். அவர்களுடன் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாநகர் மற்றும் கிராம பகுதிகளில் பல்வேறு பணிகளை மேற்ெகாண்டு நாடோடி வாழ்க்கை நடத்தி வரும் நபர்கள் புறம்போக்கு நிலத்தில் தற்காலிகமாக குடிசைகள் அமைத்து தங்கியுள்ளனர். இவர்கள் பொரும்பாலும் குடுகுடுப்பை மற்றும் கிளி, ஓலைச்சுவடிகளை எடுத்து கொண்டு தெருதெருவாக ஜோதிடம் பார்க்கின்றனர். இவர்கள் ஒரே இடத்தில் நிலையாக இல்லாமல் தங்களுடைய இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருக்கின்றனர். இவர்களின் குழந்கைளை பள்ளிக்கு அனுப்பாமல் தெருதெருவாக பிச்சை எடுக்க அனுப்புகின்றனர். இது போன்ற குழந்தைகளை சைல்டு-லைன் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பினர் பிடித்து பெற்றோர்களை அழைத்து ஆலோசனை வழங்கி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர். ஒரு சிலர் தங்களுடைய தற்காலிக டெண்டை பிரித்துக்கொண்டு அருகில் உள்ள மாவட்டங்களுக்கு இடம்பெயர்கின்றனர். இந்நிலையில் திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இரு சிறுமிகள் பிச்சை எடுப்பதாக மாவட்ட சைல்டு-லைன் அமைப்புக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கதிர்வேல் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அந்த 2 சிறுமிகளை மீட்டனர்.

 இந்த சிறுமிகளை ஏற்கனவே சைல்டு-லைன் அதிகாரிகள் மீட்டு அருகில் உள்ள பள்ளியில் சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சில நாட்கள் மட்டுமே பள்ளிக்கு சென்ற அவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்லாமல் பிச்சை எடுப்பதை தொடர்ந்துள்ளனர். இந்த இரு சிறுமிகள் வேலுச்சாமி-சங்கை, அய்யப்பன்-பார்வதி ஆகிய தம்பதிகளின் குழந்தைகள் என்பது தெரியவந்தது. பெற்றோர்கள் மீது நம்பிக்கை இழந்த சைல்டு-லைன் அமைப்பினர் இரு சிறுமிகளையும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்க சைல்டு-லைன் அலுவலகத்திற்கு அழைத்து வர முயற்சித்தனர். அப்போது பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து குழந்கைளை பிடித்துக்கொண்டு  சைல்டு-லைன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இதுபோல் குழந்தைகளிடம் பொருட்களை கொடுத்து விற்பனை செய்ய வைத்தால் போலீசில் புகார் கொடுத்து அனைவரையும் கைது செய்வோம் என சைல்டு-லைன் அதிகாரிகள் எச்சரித்து சிறுமிகளை விடுவித்தனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் நொய்யல் வீதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : children ,
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...