சுவர் இடிந்து விழுந்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம், சாலை மறியல்

திருப்பூர்,டிச.5: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

 கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். இதற்கு காரணமான தனி நபரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை கண்டித்தும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது மனித உரிமை ஆணையமும், எஸ்.சி, எஸ்.டி கமிஷனும் வழக்குப்பதிவு செய்து பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும்.இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ. 25 லட்சம் வழங்க வேண்டுமென கூறியும் ஆதித்தமிழர் பேரவை சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவை செயலாளர் வேந்தன் மகேஸ் தலைமை வகித்தார்.

மாநில துணை பொதுச்செயலாளர் விடுதலைசெல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 21  பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து பின்னர் மாலை விடுதலை செய்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த மறியலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன், துணை செயலாளர் சத்தியன் உள்ளிட்ட 11 பேர் பங்கேற்றனர். இவர்களை கைது செய்த போலீசார் தனியார் மண்டபத்தில் அடைத்து மாலையில் விடுவித்தனர்.

Related Stories:

>