×

வணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் காவல்துறை ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தல்

முசிறி , டிச.5: முசிறியில் நகைக் கடை உரிமையாளர்கள், டாஸ்மார்க் மேற்பார்வையாளர்கள், வட்டிக் கடை மற்றும் வியாபாரிகள் சங்கத்தினருடன் திருட்டை தவிர்த்தல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் காவல்துறை சார்பில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு முசிறி டிஎஸ்பி செந்தில்குமார் தலைமை வகித்தார். எஸ்ஐ., செல்லப்பா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முசிறி, தொட்டியம், தா.பேட்டை, மேட்டுப்பாளையம், காட்டுப்புத்தூர், துறையூர், உப்பிலியபுரம் பகுதிகளை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர்கள், டாஸ்மார்க் கடை மேற்பார்வையாளர்கள், வட்டிக்கடை மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் கலந்துகொண்டனர். அப்போது வங்கி மற்றும் பிற இடங்களுக்கு பணம் நகை கொண்டு செல்லும்போது பாதுகாப்புடன் கொண்டு செல்லவும், பணம் அதிகமாக எடுத்துச் செல்வதை தவிர்த்து 2, 3 தவணையாக பிரித்து எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் இரவு நேரங்களில் அதிக அளவு பணம் எடுத்துச் செல்வதை கூடுமானவரை தவிர்க்கவும்,தகுந்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லவும் வியாபாரிகளுக்கு போலீசாரால் அறிவுறுத்தப்பட்டது. சந்தேகப்படும்படியான நபர்கள் சுற்றி திரிந்தால் அவர்கள் குறித்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. பணி நிமித்தமாக வெளியே செல்லும்போது கவனத்தை திசை திருப்பும் வகையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தாமல் தாங்கள் செல்லும் காரியத்தில் கவனமுடன் இருக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர்.

வணிக நிறுவனங்கள் டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தவும், கடைகளை மூடிவிட்டு செல்லும்போது சிசிடிவி கேமரா இயக்கத்தில் உள்ளதா என்பதனை உறுதி செய்து கொள்ளவும், அதிக பதிவுகளை சேமிக்கும் திறன்கொண்ட கேமரா உபகரணங்களை பயன்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டது.நகைக்கடை மற்றும் பெரு ணிகர்கள் பணத்தை பெற்றுக்கொள்ள வங்கி நிர்வாகம் உரிய பாதுகாப்புடன் வாகனங்களை கடைக்கு நேரடியாக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து வங்கி அலுவலர்களுடன் கலந்துபேசி உரிய முடிவு எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags : Police Advisory Meeting ,Business Organizations ,
× RELATED தமிழகத்தில் 8 மாதங்களுக்குப் பிறகு...