இலைக்கருக்கல் நோயிலிருந்து நெற்பயிரை காப்பது எப்படி?

திருச்சி, டிச.5: மணப்பாறை வட்டாரத்தில் நெற்பயிரை தாக்கும் பாக்டீரியா இலைக்கருகல் நோய் குறித்து விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.மணப்பாறை வேளாண் உதவி இயக்குநர் (பொ) கலையரசன் தலைமை வகித்தார். தற்போதைய சூழ்நிலையில் நெற்பயிரைத்தாக்கும் பாக்டீரியா, இலைக்கருகல் நோய் தாக்குதல் அறிகுறிகள் ஆங்காங்கே தென்படுகின்றன. நோய் வளர்ச்சிக்கு சாதகமான மழை மற்றும் அதிக ஈரப்பதம் அதிக தழைச்சத்து தன்மை கொண்ட மண், அதிக காற்று இருப்பதினால் ஒரு பயிரிலிருந்து மற்றொரு பயிருக்கு பாக்டீரியா இலைக்கருகல் நோய் பரவுகின்றன. இந்நோயானது இளம்பயிரைத் தாக்கும்போது 60 சதவீதத்திற்கு மேல் உண்டாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயைப் பரப்பும் பாக்டீரியா பாசன நீர், மழை நீர், பெருங்காற்று வீசும்போது மற்ற பயிர்களுக்கு எளிதாக பரவுகின்றது. மேலும் நிழலான பகுதிகள் மற்றும் நெருக்கமாக பயிரிடப்பட்டு தழைச்சத்து அதிகமாகவும், சாம்பல் சத்து குறைவாகவும் இடப்பட்ட வயல்களில் இதன் தாக்குதல் அதிகமாகத் தோன்றும்.அறிகுறிகள்இலையின் ஓரங்களில் வட்ட வடிவ மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றி அருகிலிருந்து புள்ளிகளுடன் ஒன்றிணைந்து அளவில் பெரிதாகி, இலை முழுவதும் மஞ்சள் நிறமாகி காய்ந்து பின்பு உதிர்ந்து விடும். வளர்ந்த பயிர்களில் இதன் தாக்குதல் இலையின் நுனிப்பகுதியானது மஞ்சள் அல்லது வெளிரிய மஞ்சள் நிற நீரில் நனைந்த கீற்றுகளாக மாறத்துவங்குவதில் ஆரம்பமாகி பின்பு அளவில் பெரிதாகி வைக்கோல் காய்ந்த கோடுகளாக காட்சியளிக்கும். பாதிப்பு இலையின் இரு ஓரங்களில் காணப்படும். அதிகமான தாக்குதலுக்குள்ளான இலை முழுவதும் காய்ந்து விடும் உட்புறம் உள்ள காய்ந்த பகுதியானது நெளிந்து அலைப்போன்று நீண்ட கோடுகளுடன் தனித்தன்மையாகக் காணப்படும். இந்த கோடுகளானது நுனியிலிருந்து கீழ்நோக்கியும், இலையின் ஓரங்களிலிருந்து நடு நரம்பை நோக்கியும் பரவ ஆரம்பிக்கும்.கட்டுப்பாடு முறைகள்அடித்தாள்கள், வைக்கோல் மற்றும் நெற்கழிவுகளில் இந்த பாக்டீரியாவானது நீண்ட காலம் உயிர் வாழும் தன்மை கொண்டதால் அவற்றை அழித்து விட வேண்டும். நோய் தாக்கப்பட்ட இலைகளை அல்லது பயிரினை பறித்து அழித்துவிட வேண்டும். இதனால் மற்ற பயிர்களுக்கு நோயானது பரவாது. நோய் தாக்கப்பட்ட வயல்களிலிருந்து அருகிலிருக்கும் வயல்களுக்கு கண்டிப்பாக தண்ணீர் பாய்ச்சக் கூடாது. மேலும் வயலில் தண்ணீரை அதிகமாக நிறுத்தி வைக்கக்கூடாது.

நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் 20சத பசுஞ்சாண கரைசல் தெளிக்க வேண்டும். இதற்கு ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் 40 கிலோ பசுஞ்சாணத்தை 100 லி. தண்ணீரில் நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊற வேண்டும். மறுநாள் காலையில் அதனை வடிகட்டி பெறப்படும் தெளிந்த கரைசலுடன் மேலும் 100 லி. தண்ணீர் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு காலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.தாக்குதல் அதிகமாக காணப்படும்போது காப்பர் ஆக்ஸி குளோரைடு 500 கிராம் மற்றும் ஸ்டெரெப்டோ மைசின் சல்பேட் மற்றும் டெட்ரா சைக்ளின் கலவை 120 கிராம் ஆகிய மருந்து கலவையினை 200 லி. தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் தெளித்துக் கட்டுப்படுத்த வேண்டும். மேற்கண்ட முறைகளை பயன்படுத்தி பாக்டீரியா இலைக்கருகள் நோயினை கட்டுபடுத்தலாம் என அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலை பேராசிரியர் ஜெயக்குமார் மற்றும் இணை பேராசிரியர் மாரிமுத்து ஆகியோர் தெரிவித்தனர்.மணப்பாறை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சந்தனமேரி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சபரிசெல்வன், ரவிவர்மா, உதவி வேளாண் அலுவலர் செல்வி ஜோஸ்பின்மேரி, உழவர் நண்பர் செல்வமூர்த்தி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related Stories: