போராட்டம் பெயரில் அரை நிர்வாண ஆட்டம் அய்யாக்கண்ணு மீது கலெக்டர், கமிஷனரிடம் புகார்

திருச்சி, டிச.6: அரை நிர்வாணத்துடன் சகதியில் உருண்டு போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.திருச்சி இ.புதூர் சமூகநீதி மக்கள் உரிமை இயக்கம் பொதுச்செயலாளர் ஜான்ராஜ்குமார் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். தேர்தல் நடத்தை விதி அமலானதால் மனு பெட்டியில் மனுவை போட்டார். அவரது மனுவில் கூறியிருப்பதாவது: சமீப காலமாக விவசாயிகள் சங்கம் போராட்டம் என்ற போர்வையில் புனிதமாக கருதப்படும் விவசாயிகளை கொச்சைப்படுத்தும் நோக்கில் திருச்சியை சேர்ந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு என்பவர் விநோத செயல்களை புகுத்தி இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவதும் செயல்படுவதும் கொள்கையாக வைத்துள்ளார். கடந்த நவ.29ம் தேதி விவசாயிகளை அரை நிர்வாணப்படுத்தி சகதியில் உருண்டு திருச்சி கலெக்டர் அலுவலகத்திலயே இவர் போராட்டம் நடத்தி உள்ளே நுழைகிறார்.

இச்செயல் மூலம் இவர் சட்டத்தை மதிப்பதில்லை என்பதும், கலெக்டர் அலுவலகம் செல்லும் பொதுமக்கள் மற்ற மனுதாரருக்கு இது தவறான முன்னுதாரணமாகிவிடும். பண்பாட்டை மீறி செயல்படுகிறார். இது மிகவும் கண்டனத்திற்குரியதாகும். இதை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். விவசாயிகள் நலனில் அக்கறை உள்ளவர் அரசையும், அதிகாரிகளையும் அணுக வேண்டும். ஆனால் தவறான போராட்டங்களை செய்து வருகிறார். இதுபோன்ற தவறான போராட்டங்களை அனுமதிக்கக் கூடாது. இவரை ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எச்சரித்துள்ளார். எனவே கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் அய்யாக்கண்ணு மீது உரிய சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக்குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை திருச்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் மற்றும் சட்டம் ஒழுங்கு உதவி ஆணையருக்கும் புகாராக அனுப்பி உள்ளார்.

Related Stories:

>