கோவையில் 3 மாடி கட்டிடத்தில் ‘திடீர்’ தீ விபத்து

கோவை, டிச.5:கோவையில் 3 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் ‘தீ’ விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. கோவை பைவ் கார்னர் இஸ்மாயில் வீதியில் வசிப்பவர் பாண்டியன்(40). மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த இவர் கோவை என்.எச். ரோடு பைவ் கார்னரில் உள்ள 3 மாடி கட்டிடத்தில் பேக் கடை வைத்துள்ளார். தரைதளத்தில் பேக் கடையும், முதல், 2, மற்றும் 3-வது தளங்களில் பேக்குகளை வைப்பதற்கான குடோனும் உள்ளது. 10 அடி அகலம் 40 அடி நீளம் கொண்ட இந்த கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் நேற்று காலை 8.30 மணி அளவில் கரும்புகை வெளியேறியது. அப்போது அங்கு ரோந்து சுற்றி வந்த போலீசார் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.மாவட்ட தீயணைப்பு அதிகாரி (பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி, உதவி மாவட்ட அதிகாரிகள் தவமணி, பாலகிருஷ்ணன், நிலைய தீயணைப்பு அதிகாரிகள் ரவிச்சந்திரன், மருதமுத்து ஆகியோர் தலைமையில் தெற்கு தீயணைப்பு நிலையத்தில் இருந்து 2 வாகனங்களும், வடக்கு தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு வாகனம் என 3 வாகனத்தில் 21 வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்து போலீசார் அப்பகுதியில் உடனடியாக போக்குவரத்தை நிறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.பேக் கடையை ஒட்டியவாறு கேஸ் ஸ்டவ், குக்கர் விற்பனை செய்யும் கடை, அதன் மேல் மாடியில் 2 வீடுகள் உள்ளது. இதன் அருகில் நோட்டு, புத்தகம் கடை, செருப்பு கடை உள்பட என ஏராளமான கடைகள் அடுத்தடுத்து உள்ளன. வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீ மேலும் பரவாமல் உடனடியாக தீயை அணைத்ததால் பெருத்த சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் தீயில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பேக்குகள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: