×

தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம்

வால்பாறை, டிச.5: கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள தாய்முடி எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தோட்டத்திற்கு நேற்று காலை மருந்து தெளிக்கும் பணிக்கு சென்ற தொழிலாளர்களை காட்டு யானைகள் விரட்டியடித்தன.
வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் ஒரு வனப்பகுதியைவிட்டு மற்றொரு வனப்பகுதிக்கு இரவில் செல்லும்போது விடிந்து விட்டாலோ, குட்டிகள் இருந்தாலோ பாதுகாப்பு கருதி தேயிலைத் தோட்டங்களில் முகாமிடுகிறது. இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு தேயிலைத் தோட்டத்திற்கு மருந்து தெளிக்க 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தாய்முடி எஸ்டேட் தேயிலை தோட்டத்திற்கு சென்றனர். அங்கு காட்டு யானைகள் நிற்பது தெரியாமல் தோட்டத்திற்குள் நுழைந்த தொழிலாளர்களை காட்டு யானைகள் விரட்டியது. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் ஒடி தப்பினர்.தகவலறிந்த மானாம்பள்ளி வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு, யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். மேலும் முடீஸ் எஸ்டேட் செல்லும் மெயின் ரோடு அவ்வழியே செல்வதால் சுற்றுலாப்பயணிகள், கேரளா செல்லும் பயணிகள் என யானையை கண்டவுடன் அனைவரும் புகைப்படம் எடுக்கவும், செல்பி எடுக்கவும் குவிந்துவிட்டதால் பரபரப்பு நிலவியது.
ஒரு கட்டத்தில் யானைகள் சாலையை கடக்க முயன்றன. போக்குவரத்தை வனத்துறையினர் கட்டுப்படுத்தி யானைகள் சாலையை கடக்க உதவினர். இருப்பினும் யானைகள் சாலையை கடக்காமல் மக்கள் நிற்கும் பகுதிக்கு வந்தன. இந்த நிலையில், 12 மணி அளவில் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை ஊழியர்கள் வாகனத்தில் சைரன் மற்றும் ஒலிபெருக்கி ஒலிக்கச் செய்து, காட்டு யானைகளை அப்பகுதியிலுள்ள மித வனப்பகுதிக்கு, நீர்நிலை புறம்போக்கு பகுதியில் விரட்டினர்.இச்சம்பவத்தால் வால்பாறை கேரளா செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து யானைகள் அப்பகுதியில் உள்ளதால் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் வால்பாறையை அடுத்த சிறுகுன்றா மேல்பிரிவு எஸ்டேட்டில் நேற்று காலை 6 மணி அளவில் தோட்ட கள அலுவலகம் முன் ஒற்றை காட்டு யானை முகாமிட்டதால் பரபரப்பு நிலவியது. அந்த யானையை வால்பாறை வனத்துறையினர் அருகில் உள்ள வனத்திற்குள் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பின் விரட்டியடித்தனர்.

Tags : Wild Elephants Camp ,Tea Garden ,
× RELATED கோத்தகிரியில் தேயிலை தோட்ட கிணற்றில் சிறுத்தை, குரங்கு சடலம் மீட்பு