×

அன்னூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க கோரிக்கை

அன்னூர்,டிச.5: கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சியில் கோவை செல்லும் சாலையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. தற்போது சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக வைரஸ் காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. நாள்தோறும் இம்மருத்துவமனைக்கு 600க்கும் மேற்பட்டபுறநோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு ஒரு தலைமை மருத்துவர் உள்பட 6 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் இருவர் அரசு சார்பில் நடைபெறும் பொதுமருத்துவமுகாமிற்கு பணிக்கு சென்று விடுவதால் 4 மருத்துவர்கள் மட்டுமே உள்நோயாளிகள் மற்றும் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிஉள்ளது. இதனால் நோயாளிகள் சிகிச்சை பெற நீண்டநேரம் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. பணிச்சுமை காரணமாக நோயாளிகளை கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று மேல் சிகிச்சை பெறும்படி மருத்துவர்கள் பரிந்துரை செல்கின்றனர். கோவை அரசு தலைமை மருத்துவமனையில் அன்னூரில் இருந்து செல்லும் நோயாளிகளுக்கு திருப்திகரமாக சிகிச்சை கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. அன்னூர் அரசு மருத்துவமனையில் தற்போது 48 படுக்கைகள் உள்ளன. இதனை தரம் உயர்த்தி 100 படுக்கை வசதி கொண்டதாக மாற்ற வேண்டும். மேலும் செவிலியர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு கூடுதல் மருத்துவர்கள்,மருந்தாளுனர்.

எக்ஸ்ரே டெக்னீசியன்கள்,இரவுகாவலர் என தேவைக்கேற்ப கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மருத்துவமனைக்கு ஜெனரேட்டர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். கோவை- சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் விபத்துகள் நடைபெறுவதால் விபத்தில் சிக்குவோரின் உயிரை காப்பாற்ற அன்னூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவ வசதியை ஏற்படுத்தி கொடுப்பதோடு, மருந்துகளின் அளவை இருமடங்காக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : doctors ,Annur Government Hospital ,
× RELATED தரம் உயர்த்தியும் டாக்டர்கள் எண்ணிக்கை இல்லை கலெக்டர் கண்டுகொள்வாரா?