×

திருவாரூர் நகரில் தொடர் மழையால் சாலைகள் படுமோசம்

திருவாரூர், டிச.5: திருவாரூர் நகரில் தொடர்ந்து பெய்த மழையால் சாலைகள் அனைத்தும் சேதமடைந்து போக்குவரத்திற்கு பயனற்ற வகையில் இருந்து வருவதால், உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.30 வார்டுகளை கொண்ட திருவாரூர் நகராட்சி பகுதியில் கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 55 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். அதன் பின்னர் தற்போது 8 ஆண்டு காலத்தில் இந்த மக்கள் தொகை என்பது அதிகரித்துள்ள நிலையில், மாவட்டத் தலைநகராக திருவாரூர் இருந்து வருவதால் இங்குள்ள கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம் என அரசின் அனைத்து துறை அலுவலகங்கள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மத்திய பல்கலைகழகம் போன்றவை இருந்து வருகிறது. இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பேர்கள் வரையில் இந்த நகரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் இந்த நகரத்தில் உள்ள முக்கிய சாலைகளில் ஒன்றான பனகல் சாலை, நேதாஜி சாலை உட்பட பல்வேறு சாலைகள் மட்டுமின்றி நகரில் இருந்து மயிலாடுதுறை செல்வதற்கு இணைப்பு சாலையாக இருந்து வரும் கொத்த தெரு சாலையும் மிகவும் குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்திற்கு பயனற்ற வகையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் சாலைகளை சீரமைக்க வேண்டும், தெரு விளக்குகள் சரியாக எரிய விட வேண்டும், நகரில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நுகர்வோர் அமைப்பு மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் கடந்த மாதம் 8 ஆம் தேதி போராட்டம் நடத்திட திட்டமிடப்பட்டிருந்தது.இதுகுறித்து கமிஷனர் சங்கரன் நடத்திய பேச்சுவார்த்தையில் சாலைகள் உடனே செப்பனிடப்படும் என்ற உறுதிமொழியை ஏற்று போராட்டமானது ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் தற்போது வரையில் இந்த சாலைகள் செப்பனிடப்படாமல் இருந்து வருவதாலும், அவ்வப்போது கனமழை பெய்து வருவதாலும் சாலையில் குழிகள் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் பெரும் விபத்தில் சிக்கும் நிலை இருந்து வருகிறது.எனவே நகரில் சேதமடைந்த சாலைகளை உடனே செப்பனிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும்,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiruvarur ,
× RELATED வாக்கு சாவடிகளுக்கு அனுப்புவதற்காக...