×

கும்பகோணம் சுற்றுவட்டார கொய்யா மர தோப்புகளில் தேங்கி நிற்கும் மழைநீர்

கும்பகோணம், டிச. 5: கும்பகோணம் அடுத்த வளையப்பேட்டை, மாங்குடி, சுந்தரபெருமாள்கோயில், திருவலஞ்சுழி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 50 ஏக்கருக்கு மேல் கொய்யா சாகுபடியை விவசாயிகள் செய்து வருகின்றனர். இவா்கள் பனாரஸ் கொய்யா, சுவாமிமலை கொய்யா உள்ளிட்ட வகைளை பதியம் போட்டும், கன்றுகளை ஊன்றுவர்.தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் கொய்யா மரங்கள் இருந்தாலும் சுவாமிமலை கொய்யா அதிக மனம் உள்ளது. தற்போது சுவாமிமலை கொய்யா சாகுபடி குறைந்து விட்டது. அதற்கு பதிலாக தற்போது பனாரஸ் கொய்யாவை சாகுபடி செய்கின்றனர். ஒரு சில விவசாயிகள் மட்டுமே சுவாமிமலை கொய்யாவை சாகுபடி செய்கின்றனர்.இந்நிலையில் கடந்த 6 நாட்களாக பலத்த மழை பெய்து வரும் நிலையில் கும்பகோணம் அடுத்த வளையப்பேட்டை, மாங்குடி, சுவாமிமலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்துள்ள கொய்யா மரங்களை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் கொய்யா மரத்தின் வேர்கள் அறுந்தும், அழுகியும் உள்ளதால் கொய்யா காய்களாகவும், பிஞ்சுகளாகவும் கீழே உதிர்ந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏக்கருக்கு 4 டன் கொய்யா பழம் சாகுபடி செய்து வந்த நிலையில் தற்போது மரங்களை சுற்றிலும் தேங்கியுள்ள மழைநீரால் அனைத்தும் வீணாகும் நிலை உருவாகியுள்ளது. எனவே மழையால் பாதிக்கப்பட்ட கொய்யா விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து கொய்யா விவசாயி சிப்பாய் குமார் கூறுகையில், கும்பகோணம் அடுத்த வளையப்பேட்டை, மாங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் 50 ஏக்கருக்கு மேல் கொய்யா சாகுபடி செய்து வருகின்றனர். இந்த கொய்யா பழ மரம் குறைந்தது 10 ஆண்டுகள் வரை நல்ல விளைச்சலை தரும். தற்போது வைத்துள்ள கொய்யா மரம் நடவு செய்து 5 ஆண்டுகளாகிறது. குறைந்தது 6 மாதத்துக்கு ஒருமுறை பழங்கள் பறித்து விற்பனை செய்யப்படும்.

பனாரஸ் கொய்யா ஒரு முறை பறித்தால் 5 டன் பழங்கள் தான் வரும். இந்நிலையில் கடந்த 6 நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் கொய்யா மர தோப்புகளை சுற்றிலும் மழைநீர் தெப்பம்போல் தேங்கியுள்ளது. இதனால் மரத்தின் கீழுள்ள வேர்கள் அறுந்து அழுகிவிடும். இதுபோன்ற நிலையில் கொய்யா பழங்கள் பெருக்காமல் சிறுத்து விடுவதால் விலை போகாது. சில கொய்யா பழங்கள் பெருத்தாலும், ருசி இல்லாமல் போய் விடுவதால் மழைநீரில் தேங்கிய மரங்களின் கொய்யா பழங்களை வியாபாரிகள் வாங்கி செல்லமாட்டார்கள்.தோப்புகளை சுற்றியுள்ள வாய்க்கால், வடிகால் வாய்க்கால்களை தூர்வாராமல் தூர்வாரியதாக ஊராட்சி நிர்வாகம் தெரிவிக்கிறது. தற்போது வாய்க்கால்களில் புதர்போல் செடி, கொடிகள் மண்டியதால் மழைநீர் தோப்பிலிருந்து வடிய வழியின்றி தேங்கியுள்ளது.எனவே உடனடியாக வாய்க்கால், வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி கொய்யா போன்ற விவசாய விளைபொருட்களை காப்பாற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட கொய்யா சாகுபடி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

Tags : Kumbakonam ,koya tree gardens ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...