நடுவிக்காட்டில் கூரை வீடு எரிந்து சாம்பல்

அதிராம்பட்டினம், டிச. 5: நடுவிக்காட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் கூரை வீடு எரிந்து சாம்பலானது.அதிராம்பட்டினம் அருகே உள்ள நடுவிக்காட்டில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவரது மனைவி சுசீலா. இவர்களுக்கு பிரபாகரன் (30), தனுஷ் (17) ஆகிய மகன்கள் உள்ளனர். பிரபாகரனுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. நேற்று மாலை வீட்டில் சுசீலா, தனுஷ் ஆகியோர் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் முகப்பில் திடீரென புகைமூட்டமாக காணப்பட்டது. இதையடுத்து இருவரும் வெளியே வந்து பார்த்தபோது வீடு தீப்பற்றி எரிந்தது தெரியவந்தது.இதையடுத்து அருகில் உள்ள பொதுமக்கள் வந்து தீயை அணைக்க முயன்றனர். அப்போது காற்று வேகமாக வீசியதால் மளமளவென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். தீவிபத்தில் வீட்டில் இருந்த அத்யாவசிய பொருட்கள் அனைத்து எரிந்து சாம்பலானது. இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: