பொதுமக்கள் அவதி கடைசி தேதி வரை காத்திருக்காமல் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்

பாபநாசம், டிச. 5: பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குநர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பாபநாசம் வட்டாரம் நடப்பு சம்பா மற்றும் தாளடி நடவு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.தற்போது பருவமழை தீவிரமடைந்து வருவதால் வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயிர் காப்பீட்டு திட்டமானது இயற்கை சீற்றங்களான புயல், வெள்ளம், வறட்சி பாதிப்புகளால் பயிர்களுக்கு ஏற்படும் இழப்புகளில் இருந்து விவசாயிகளை பாதுகாக்கிறது. இதில் பயிர் காலம் முழுவதுமாக காப்பீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. விதைப்பு பொய்த்து போதல், நடவு செய்யும் சூழ்நிலை, பயிர் வளர்ச்சி காலத்தில் ஏற்படும் இடர்பாடு மற்றும் அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகளுக்கு காப்பீடு வழங்க வாய்ப்ப்புள்ளது. நடப்பாண்டு ராபி பருவத்தில் சம்பா, தாளடி சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வரும் 15ம் தேதி கடைசி நாளாகும்.

ஏக்கருக்கு ரூ.465 பிரீமியம் செலுத்த வேண்டும். ஏக்கருக்கு ரூ.31,000 பயிர் காப்பீடு தொகையாகும். மேலும் விவசாயிகள் இதற்கு உண்டான ஆவணங்கள், புகைப்படம், சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு புத்தக நகல் மற்றும் முன்மொழி படிவம் மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவை கொண்டு அந்தந்த பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் சேவை மையம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>