உள்ளாட்சி தேர்தலையொட்டி மாவட்டத்தில் 14 ஒன்றியத்தில் 7 பறக்கும் படை

ஈரோடு,  டிச. 4: ஈரோடு மாவட்டத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலையொட்டி 14  யூனியனில் 7 பறக்கும் படை அமைக்கப்படும் என அனைத்து கட்சி பிரதிநிதிகள்  பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் கதிரவன் தெரிவித்தார்.

 ஈரோடு  கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி  பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட  தேர்தல் அதிகாரியான கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். இதில், அனைத்து  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர். இந்த  கூட்டத்தில் கலெக்டர் கதிரவன் கூறியதாவது: மாநில தேர்தல்  ஆணையத்தால் நேற்று முன்தினம் தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி  அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதி இரண்டு  கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு  மாவட்டத்தில் 19 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 183 ஊராட்சி ஒன்றிய  உறுப்பினர்கள், 225 சிற்றூராட்சி தலைவர் மற்றும் 2,097 சிற்றூராட்சி வார்டு  உறுப்பினர் என மொத்தம் 2,524 உறுப்பினர்கள் நேரடித் தேர்தல் மூலமும், ஒரு  மாவட்ட ஊராட்சி தலைவர், ஒரு மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், 14 ஊராட்சி  ஒன்றிய குழுத்தலைவர்கள், 14 ஊராட்சி ஒன்றிய குழுத் துணைத்தலைவர்கள், 225  சிற்றூராட்சி துணைத் தலைவர்கள் என மொத்தம் 255 உறுப்பினர்களுக்கு மறைமுகத்  தேர்தல் என மொத்தம் 2,779 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

 மேலும் நேரடி  மற்றும் மறைமுக தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கள் பெறுதல் வரும் 6ம் தேதி  முதல் 13ம் தேதியும், மனுக்களை ஆய்வு செய்தல் வரும் 16ம் தேதி அன்றும்,  வேட்பு மனுக்களை 18ம் தேதி திரும்ப பெறலாம். வாக்குப்பதிவு எண்ணிக்கை  ஜன.2ம் தேதி நடக்கிறது. தேர்தல் நடவடிக்கைகள் ஜனவரி 4ம் தேதியுடன்  முடிவடைகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஜனவரி 6ம் தேதி பதவி  ஏற்பார்கள். மறைமுக தேர்தலுக்கான கூட்டம் ஜன.11ம் தேதி நடைபெறும்.  எனவே, அந்தந்த பகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அவர்களது பகுதியில் உள்ள  வாக்குச்சாவடியை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும்.  இரண்டு யூனியனுக்கு, ஒரு பறக்கும் படை என, 14 யூனியனுக்கு, ஏழு பறக்கும்  படை அமைக்கப்படும். பொதுமக்கள் பணம் எடுத்து செல்வது குறித்து எந்த  அறிவிப்பும் வரவில்லை. அரசு அலுவலகங்கள், அரசு சுவர்களில் கட்சி தொடர்பான  விளம்பரங்கள், போட்டோ போன்றவை இருந்தால் அகற்றப்படும். அல்லது  அழிக்கப்படும். வாக்குச்சாவடிக்கு அருகே கட்சி கொடிக்கம்பங்கள் இருந்தால்,  அவை மறைக்கப்படும்.

 தற்போது கிராமப்பகுதியில்  மட்டும் பொது நிகழ்ச்சிகள் நடக்காது. மேலும் மழை, வெள்ளமாக  இருப்பதால், இதன் மூலமான பாதிப்புக்கு, அரசு சார்பிலான நிவாரணம் வழங்குதல்  போன்றவை வழக்கம்போல நடக்கும். பொங்கல் பரிசு பொருட்கள் ஏற்கனவே  வழங்கப்பட்டு வரும் நிகழ்ச்சி. இதுபற்றி, தேர்தல் ஆணையத்திடம்  கேட்டுள்ளோம். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வழங்குவதில்  சிக்கல் இல்லை. கிராமப்பகுதியில் வழங்குவது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில்  அரசு விளக்கி, உரிய உத்தரவு பிறப்பிக்கும். இந்த தேர்தல் முற்றிலும்  கிராமப்பகுதியில் நடக்கும் தேர்தல் என்பதால், வேட்பாளர் ஒரு கார் மட்டும்  பயன்படுத்தலாம். பேனர் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 இந்த கூட்டத்தில் டி.ஆர்.ஓ. கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: