காவலன் செயலி பயன்பாடு தென்காசி எஸ்பி விளக்கம்

தென்காசி, டிச. 5: தென்காசியில் எஸ்பி சுகுணாசிங், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் காவலன் செயலி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் மொபைல் போனில் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து தங்களது செல்போன் எண்ணை பதிவு செய்து கொள்ள வேண்டும்.  பெண்கள், குழந்தைகளுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் இந்த செயலியில் எஸ்ஓஎஸ் என்பதனை அழுத்தினால் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைக்கும். உடனடியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து உங்களுக்கு செல்போனில் தொடர்பு கொள்வர்.  போனில் தொடர்பு கிடைத்தாலும் தானாக செல்போனில் 14 நிமிடங்கள் வீடியோ படம் எடுக்கப்படும்.  அதன்மூலம் செயலி பயன்படுத்தியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதனை கட்டுப்பாடு அறைக்கு தெரியவரும். இதையடுத்து அருகே உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவப்படும். ஒரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிக்கு பிற காவல் நிலையத்தை சேர்ந்தவர்கள் செல்லலாம்.  காவல் நிலைய எல்லை பிரச்னை கிடையாது. சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்து விசாரணை நடத்தி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு அறிக்கை தாக்கல் செய்வர்.

இந்த செயலி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.  இதனை அனைவரும் பயன்படுத்த முன்வர வேண்டும்.  காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்பு கொள்ளும்போது போனை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டால் அவர்களின் உறவினர்கள், நண்பர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். இதற்கு காவலன் செயலியை பதிவிறக்கம் செய்யும்போது பதிவிறக்கம் செய்தவரின் செல்போன் எண் மற்றும் இருவரின் செல்போன் எண்ணை தெரிவிக்க வேண்டும். இந்த இருவர் குடும்பத்தினராக,  நண்பராக இருக்கலாம்.  காவலன் செயலியை முறையாக பயன்படுத்தினால் குற்றங்கள் குறையும்.  பெண்களை கிண்டல், கேலி செய்ய நினைப்பவர்கள், குற்றம் செய்ய நினைப்பவர்கள் அச்சமடைவர். மீறி குற்றங்கள் நடைபெற்றால் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டு கைது செய்யப்படுவார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக காவல் துறை மூலம் உதவி கிடைக்கும்.  தகவல் தெரிவிப்பவர்கள் இருக்குமிடம் ஜிபிஎஸ் மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிய வரும்.  அனைத்து தரப்பு பொதுமக்களும் தங்கள் செல்போனில் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெற கேட்டுக்கொள்கிறோம்.  இவ்வாறு கூறினார். காவலன் செயலி செயல்முறை விளக்கத்தை தென்காசி டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் செய்து காட்டினார்.

Related Stories: