அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசல் எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது பயணிகள் கடும் அவதி

அரக்கோணம், டிச.5: அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலை சரியான நேரத்தில் கண்டறிந்ததால் எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம்- திருத்தணி செல்லும் ரயில் மார்கத்தில் ரயில்வே ஊழியர்கள் நேற்று காலை வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காலை 10.10 மணிக்கு நார்த் கேபின் எனப்படும் இடத்தின் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டறிந்தனர். இதுதொடர்பாக, உடனடியாக அரக்கோணம்- திருத்தணி ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து, ‘இந்த தடத்தில் ரயில்களை இயக்க வேண்டாம்’ எனக்கூறினர். அதற்குள் அவ்வழியாக சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் நடுவழியில் உடனடியாக நிறுத்தப்பட்டது.

Advertising
Advertising

இதையடுத்து, அரக்கோணத்தில் இருந்து ரயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை ஆய்வு செய்தனர். பின்னர், காலை 10.55 மணியளவில் விரிசலை சீரமைத்து ரயிலை இயக்க அனுமதித்தனர். முன்னதாக அதே தடத்தில் வந்த ஹவுரா-யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலும் நிறுத்தப்பட்டிருந்தது. சுமார் 45 நிமிடம் ரயிலை நிறுத்தியதால் அதில் இருந்த பயணிகள் சிரமமடைந்தனர்.

Related Stories: