புதிய மாவட்டங்களுக்கான வார்டு வரையறை செய்த பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும்

திருப்பத்தூர், டிச.5: புதிய மாவட்டங்களுக்கான வார்டு வரையறை செய்த பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழுக்கூட்டம் திருப்பத்தூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு திருப்பத்தூர் நகர செயலாளர் சுந்தரேசன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் நந்தி முன்னிலை வகித்தார். குடியாத்தம் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் லதா, மாவட்ட துணைச் செயலாளர் தேவதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட செயலாளர் சாமிக்கண்ணு கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவித்திருப்பது வரலாற்றில் இதுவரை இல்லாத வினோதமான அறிவிப்பாகும்.

பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கு பிறகு தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது பெரிய மோசடி செயலாகும். இதன் மூலம் ஆளும் கட்சியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவது வெளிப்படையாகவே தெரிகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த ஆளும் கட்சி விரும்பவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. ஆகவே, மாநில தேர்தல் ஆணையம் ஊரகப்பகுதிகள் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். அதேபோல, தமிழகத்தில் 5 மாவட்டங்கள் புதியதாக உருவாகியுள்ள சூழ்நிலையில், புதிய மாவட்டங்களுக்கு வார்டு வரையறை செய்யப்பட்ட பிறகே உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த வேண்டும். மேலும், உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தலில் திமுக உடன் கூட்டணி அமைத்து அதிக இடங்களை கைப்பற்றுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் திருப்பத்தூர், கந்திலி, ஜோலார்பேட்டை, நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதிகளில் இருந்து கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: