வாணியம்பாடி பஸ்நிலையத்தில் பொதுகழிப்பிடத்தை முள்போட்டு மூடி வைத்துள்ள நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

வாணியம்பாடி, டிச.5:வாணியம்பாடி பஸ்நிலையத்தில் பொதுக்கழிப்பிடத்தை நகராட்சி நிர்வாகம் முள் போட்டு மூடி வைத்துள்ளதாக பொதுமக்கள் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளனர்.வாணியம்பாடி பஸ்நிலையத்துக்கு பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பஸ்களில் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பயணிகளின் பயன்பாட்டுக்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் பஸ்நிலையத்தில் பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது.இந்த கழிப்பிடத்தை பயணிகள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு முள் போட்டு மூடப்பட்டது. எனவே, பஸ்நிலைய வளாகத்தில் ஆங்காங்கே பயணிகள் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். இதனால் பஸ்நிலையத்தில் துர்நாற்றம் வீசுவதோடு, தொறுநோய் பரவும் வகையில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.இதனால், பஸ்நிலையத்தில் பயணிகள் மூக்கை பிடித்தபடி நிற்கின்றனர். இந்நிலையில், வாணியம்பாடி நகராட்சி நிர்வாகம்தான் பொதுக்கழிப்பிடத்தை முள் போட்டு மூடி வைத்துள்ளதாக பயணிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பஸ்நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள் கூறுகையில், ‘வாணியம்பாடி பஸ் நிலையம் முக்கியமானதாக விளங்குகிறது. இந்நிலையில், பஸ்நிலையத்தில் உள்ள பொதுக்கழிப்பிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முள் போட்டு மூடப்பட்டது. இதனால், பஸ்நிலையத்தில் ஆங்காங்கே பயணிகள் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் பஸ்நிலையத்தில் துப்புரவு பணிகளும் கேள்விக்குறியாகி உள்ளது. தனியார் சார்பில் குத்தகை எடுத்து நடத்தப்படும் கட்டண கழிப்பிடத்தை பயன்படுத்த நிர்பந்திக்கும் வகையில், நகராட்சி நிர்வாகம்தான் பொதுக்கழிப்பிடத்தை முள் போட்டு மூடி வைத்துள்ளது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுக்கழிப்பிடத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து சுகாதாரமாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.

Related Stories: