×

உள்ளாட்சி தேர்தல் நேர்காணலின்போது அமைச்சர் முன்னிலையில் அதிமுகவினர் கோஷ்டி மோதல்

கலசபாக்கம், டிச.5: கலசபாக்கம் அருகே உள்ளாட்சி தேர்தலையொட்டி நேற்று நடந்த நேர்காணலின்போது அமைச்சர் முன்னிலையில் அதிமுகவினர் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.உள்ளாட்சி தேர்தலையொட்டி திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதியில் அதிமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 464 பேரும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 36 பேரும் சமீபத்தில் விருப்ப மனு அளித்திருந்தனர். இதையடுத்து, கலசபாக்கம் ெதாகுதிக்குட்பட்ட புதுப்பாளையம், கலசபாக்கம், ஜமுனாமரத்தூர், போளூர் ஒன்றியங்களில், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம், காஞ்சி கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நேர்காணல் நடந்தது. இதில் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் நேர்காணலை நடத்தினார். முன்னதாக, புதுப்பாளையம், ஜமுனாமரத்தூர், போளூர் ஒன்றியங்களை சேர்ந்தவர்களுக்கு நேர்காணல் நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து, கலசபாக்கம் ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்காணல் நடந்தது.

அப்போது, அதிமுக ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு எழுந்து நின்று, ஒன்றிய செயலாளர் என்ற முறையில் எனக்கு உரிய மரியாதை அளிப்பதில்லை, எந்த தகவலையும் சரிவர தெரிவிப்பதில்லை என ஆவேசமாக கூறினார். அதற்கு எம்எல்ஏ, ஒன்றிய செயலாளருக்கு அனைத்து தகவல்களும் முறையாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரையில் அவருக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டுதான் வருகிறது என கூறினார். இதற்கிடையில், எம்எல்ஏ ஆதரவாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர் ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு மற்றும் அவரது ஆதரவாளர்கள் மண்டபத்துக்கு வெளியே சென்று தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நேர்காணலில் பங்கேற்கவும், இருதரப்பினரை சமரசம் செய்யவும் சிறிது நேரத்தில் அங்கு வந்தார். அப்போது, ஒன்றிய செயலாளர் ஆதரவாளர்கள், அமைச்சரை உள்ளே விடாமல் மண்டபத்தின் கதவை இழுத்து மூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கதவை திறந்து அமைச்சரை உள்ளே அழைத்து சென்றனர். அமைச்சர் உள்ளே சென்றதும், அதிமுகவின் இருதரப்பினரும் அவர் முன்னிலையில் மீண்டும் ரகளையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் இருதரப்பினரையும் சமரசம் செய்தார். பின்னர், மண்டபத்தில் உள்ள ஒரு அறையில் வைத்து விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினார். அப்போது அமைச்சர், மோதல்களை மறந்து உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் வெற்றி பெறுவதற்கு அனைவரும் கடுைமயாக உழைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதையடுத்து நேர்காணல் சுமூகமாக நடந்து முடிந்தது. அமைச்சர் முன்னிலையில் நடந்த இந்த கோஷ்டி மோதல் அதிமுக தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Tags : minister ,government ,election ,
× RELATED குடியரசு தலைவர் முதல் முதலமைச்சர் வரை...