வன்முறை மற்றும் போதைக்கு எதிராக கோட்டையை நோக்கி சென்ற 200 பெண்கள் தடுத்து நிறுத்தம்: தாம்பரத்தில் பரபரப்பு

தாம்பரம்: தாம்பரத்தில் வன்முறை மற்றும் போதைக்கு எதிராக கோட்டையை நோக்கி நடைபயணம் மேற்கொள்ள முயன்ற மாதர் சங்கத்தை சேர்ந்த 200 பெண்களை போலீசார் கைது செய்தனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநில குழு சார்பில், வன்முறை மற்றும் போதைக்கு எதிராக நவம்பர் 25ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை வடலூர் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் கோட்டையை நோக்கி இரு குழுவாக 200க்கும் மேற்பட்ட பெண்கள் நடைபயணம் மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தாம்பரம் வந்த அவர்கள், பின்னர் நேற்று காலை தாம்பரத்திலிருந்து கோட்டையை நோக்கி நடை பயணம் செல்ல முயன்றனர். அப்போது, சென்னை தெற்கு இணை ஆணையர் மகேஸ்வரி தலைமையில் பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசார், அவர்களை நடைபயணம் செல்ல விடாமல் தடுத்தனர்.

Advertising
Advertising

ஆனாலும், ஒரு குழு தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் பேருந்து நிலையம் அருகே சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று பேருந்தில் ஏற்றி அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அதேபோல மேற்கு தாம்பரம் வெங்கடேசன் தெருவில் இருந்த மற்றொரு குழுவையும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் தாம்பரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் 3 வயது சிறுமி முதல் 70 வயது பெண்கள் வரை வித்தியாசம் இல்லாமல் பாலியல் பலாத்காரமும், அவர்களை படுகொலை செய்யக்கூடிய சம்பவங்களும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்தியாவில் பெண்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் மாறிக்கொண்டிருக்கிறது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிமுக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெண்கள், குழந்தைகள் மீதான இந்த வன்முறையின் அடிப்படை  காரணமாக இருப்பது தமிழகம் போதையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.  இன்றைக்கு எந்த இடத்தில் பார்த்தாலும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. பெண்கள் அமைப்புகளோடு அமைதியான முறையில் நடைபயணம் மேற்கொள்ள வந்த பெண்களை காவல்துறை மூலமாக வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு எங்கள் தலைவர்கள் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள். முதலமைச்சர் எங்களை வந்து சந்திக்காவிட்டாலும் எங்களது கோரிக்கையை மக்கள் முன்னால் தெளிவாக சொல்லி இருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலை போலவே அதிமுக- பாஜ கூட்டணிக்கு பலத்த அடியை உள்ளாட்சி தேர்தலிலும், வரக்கூடிய தமிழக சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் தெரிவிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: