அம்பத்தூர் தொழிற்பேட்டையில் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்: சுகாதார சீர்கேட்டால் நோய் பாதிப்பு

அம்பத்தூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சாலை ஓரத்தில் குப்பைகள், கம்பெனி கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இதனால்  சுகாதார சீர்கேடு உருவாகி பல்வேறு தொற்றுநோய்களை பரப்புகிறது. அம்பத்தூர் தொழிற்பேட்டை 1400 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கம்பெனிகள் உள்ளன. இங்கு 100க்கும் மேற்பட்ட ஏற்றுமதி ஆடை நிறுவனங்கள், சாப்ட்வேர், கால் சென்டர்களும் உள்ளன.  இங்கு சென்னை, புறநகர், திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தினமும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வந்து செல்கின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்பேட்டையில் சாலை ஓரங்களை ஆக்கிரமித்து குப்பைகள், கழிவுகள்  கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொழிலாளர்கள் நோய் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘இப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் காற்றில் பறந்து சாலையின் மையப்பகுதிக்கு வருகின்றன. சாலை ஓரத்தில் கிடக்கும் குப்பைகள் பல மாதங்களாக அகற்றாமல் மக்கி தூர்நாற்றம் வீசுகிறது. மேலும், கம்பெனிகளில் இருந்து இயந்திரங்களை துடைத்த ஆயில் துணிகள், கழிவுப் பொருட்களும் சாலை ஓரத்தில் குப்பைகளுடன் கொட்டப்பட்டு வருகின்றன. கால்வாய்களில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் குப்பைகள் குவிந்து மழைக்காலத்தில் தண்ணீர் செல்ல முடியவில்லை. இதன் காரணமாக சாலைகளில் நடந்து செல்லும் தொழிலாளர்கள், இரு, நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் ஓட்டிகள் சுகாதார சீர்கேட்டால் அவதிப்பட்டு வருகின்றனர்.  மேலும் தேங்கிநிற்கும் கழிவுநீர், குவிந்துகிடக்கும் குப்பைகளில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு தொற்று நோய்களை பரப்புகின்றன.

இதுகுறித்து பலமுறை மாநகராட்சி மற்றும் சிட்கோ நிறுவன அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்கின்றனர். இதனால் தொழிலாளர்கள், வாகன ஓட்டிகள் தினமும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து கால்வாயில் கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: