×

காஞ்சிபுரம் நகராட்சி பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் படுமோசமாக மாறிய சாலைகள்

காஞ்சிபுரம், டிச.5: காஞ்சிபுரம் நகரில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சாலைகள் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் இருந்து வாலாஜாபாத் சாலை வழியாக தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுத களான ஐயம்பேட்டை, முத்தியால்பேட்டை, ஏகனாம்பேட்டை, தாங்கி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ் மற்றும் பைக்குகளில் ஏராளமானோர் தினமும் சென்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் பெரியார் நகரில் மழைநீர் தேங்கி சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. அதேபோன்று காஞ்சிபுரத்தில் இருந்து பழைய ரயில் நிலையம் வழியாக வையாவூர், தருமநாயக்கன் பட்டறை, களியனூர், ஒழையூர், ராஜகுளம், சின்னையன் சத்திரம், சிறுவேடல், சேக்காங்குளம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வையாவூர் சாலை கோனேரிக்குப்பம் சுடுகாடு பகுதி, தனியார் பள்ளி திருப்பம், அசோக் நகர் ஆகிய பகுதிகள் படுமோசமாக மாறிவிட்டது. இதனால் அவ்வழியாக சென்று வரும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைகின்றனர்.

மேலும், காஞ்சிபுரம் புத்தேரி தெருவில் இருந்து ஏகாம்பரநாதர் கோயிலுக்கு செல்லும் சாலையில் சாலை மிகவும் சேதமடைந்து பைக்கில் செல்வோர், பாதுகாப்பாக செல்ல முடியாத நிலை உள்ளது.  இந்த சாலையில் தனியார் மேல்நிலைப் பள்ளி, வங்கி கிளை, நூலகம் என அதிக அளவில் மக்கள் வந்துசெல்லும் பகுதியாகவும் உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை, வேலூர், அரக்கோணம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஒருவழிப்பாதையாக இந்த சாலை வழியாக செல்கின்றன.  இந்த வேளையில் சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதையொட்டி, நேரங்களில் இச்சாலை வழியாக செல்லும் பைக்குகள், மேடு பள்ளங்களில் ஏறி அதிகளவில் விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் இப்பகுதிகளில் தினமும் ஏதேனும் ஒரு விபத்து சம்பவம் நடக்கிறது.  எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து, குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Roads ,municipality ,Kanchipuram ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...